தமிழகத்தை அமேசான் காட்டை போல மாற்றுவோம் என்றார்கள்... ஆனால்.. 5.48 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்கு ஒதுக்கிய 900 கோடி நிதி ‘ஸ்வாகா’?

* பராமரிப்பில்லாததால் மரக்கன்றுகள் கருகியது

* பள்ளங்களை தோண்டி மரக்கன்றுகளை நடாமல் முறைகேடு

* 8 ஆண்டுகளில் எந்த பயனும் கிடைக்கவில்லை  

* சமூக ஆர்வலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மரக்கன்றுகள் நடும் திட்டத்துக்காக கடந்த 8 ஆண்டுகளில் 5 கோடி  மரக்கன்றுகள் வாங்க ஒதுக்கிய ₹900 கோடி நிதி வீணடிக்கப்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரிக்கவும், தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் நோக்கத்திலும், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்துக்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் மாபெரும் மரம் நடும் திட்டத்தை செயல்படுத்த அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை 2012ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ராஜாஜி சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி பூங்காவில் ஆலமரக்கன்றினை நட்டு ெஜயலலிதா தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன், மகிழம்,  பூவரசு, வேம்பு, மருதம், பெருநெல்லி, மா போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்படும் என்று  கூறப்பட்டது.   

இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளில் செயல்படுத்த அரசு முடிவு செய்தது. நடவு, பராமரிப்பு என்று ஒரு மரக்கன்றுக்குக்கு சராசரியாக ரூ.200 முதல்  300 வரை செலவிடப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 5 கோடியே 48 லட்சம் மர கன்றுகள் நடப்பட்டு, 900 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளுக்கு நட்டதாக கூறியுள்ள மரங்கள் மட்டும் வளர்ந்திருந்தால் அல்லது நடப்பட்டு இருக்கும் பட்சத்தில் தமிழகமே பசுமையாக மாறியிருக்கும். சிரபுஞ்சிக்கு இணையாக தமிழகம் மாறி இருந்து இருக்கும். வேலூர் குற்றாலமாக மாறி இருக்கும். பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் மழை பெய்கிறது. மரங்கள் நட்டிருந்தால் பருவநிலை மாற்றம் இல்லாவிட்டாலும்  தமிழகம் முழுவதும் பூஞ்சோலையாக மாறியிருக்கும். மரம் நடவில்லை, ெவயில் வாட்டி எடுக்கிறது, காலம் தப்பிய மழையால் விவசாயம் பாதிப்பு என ஏகப்பட்ட இன்னல்களை தமிழக மக்கள் சந்தித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஒரு செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமானதற்கு மரக்கன்றுகளை முறையாக நடாதது, பராமரிக்காததே  காரணம். அதிலும் மரம் நடும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.  இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2014-2015ல் மரம் நடும் திட்டத்தில் 11.03 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது.  நடாத மரக்கன்றுக்கு போலி பில்:  மதுரை மாவட்டத்தில் இந்த திட்டங்களில் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. குறிப்பாக, மதுரை மாட்டுத்தாவணிப் பகுதியில் செடிகள் வளர்ப்பு மையம் உருவாக்கப்பட்டது.  இந்த மையத்துக்கு செலவிட்டதாக கூறி 19 போலி பில்களை தயாரித்து 3.18 லட்சம் மோசடி நடந்துள்ளது. இதில் சமுதாய காடுகள் வளர்ப்பதற்காக 3.59 லட்சம் செலவிட்டதாக கணக்கு  எழுதப்பட்டிருந்தது. இதற்காக, 23 போலி பில்கள் தயாரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தலைநகரும் தப்பவில்லை: சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2014ல் 10 ஆயிரம் தென்னை மரக்கன்றுகள் நடுவதற்காக நேரு ஸ்டேடியம் பின்புறம் மைலேடிஸ் பூங்காவில் வைக்கப்பட்டிருந்தது. இந்த மரக்கன்றுகளை நட்டு வைக்காமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால், அந்த மரக்கன்றுகள் கருகி வீணாகி போனது.

தூங்கிய அதிகாரிகள்.. கருகிய மரக்கன்றுகள்..

கரூர் மாவட்டத்தில் 150 ஊராட்சிப் பகுதிகளில் மரக்கன்றுகளை நடுவதற்காக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 2018-19ல் மட்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரகத் திட்டம் மூலமாக  17.68 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டன. இதற்காக, 5 ஆயிரம் மரக்கன்றுகள் வாங்கி வைக்கப்பட்டன. ஆனால், இந்த மரக்கன்றுகளை நட்டு வைக்காமல் அப்படியே போட்டு விட்டனர். இதனால், அந்த 5 ஆயிரம் மரக்கன்றுகள் அப்படியே வீணாகி போய் விட்டது. அதையும் மீறி மரக்கன்றுகள் நட்டு வைத்தால் கூட அவை முறையாக பராமரிப்பதில்லை. இந்த திட்டத்தின் படி பொது இடங்கள், சாலையோரங்கள், ஏரிக்கரைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வனத்துறை சார்பில் காப்பு காடுகளில் மரக்கன்றுகள் இரும்பு வளைய பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

கடந்த 2018ல் ஒரு மரத்திற்கு 6.76க்கு வாங்கவும், அவற்றை வைக்க 14.83ம், வனப்பகுதியில் ரூ.189ம், ஒரு வருடத்திற்கு ரூ.98.86 வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியை கொண்டு உள்ளாட்சி அமைப்புகள் முறையாக பராமரிப்பு பணி மேற்கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் இந்த மரக்கன்றுகளுக்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படவில்லை. மரக்கன்றுகள் நடும் திட்டம் எப்போதும் கோடைக்காலத்தில் அறிவிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாத நிலையில், கரைகள் வைக்கப்படும் கன்றுகள் கருகி போய் விடுகிறது. மேலும், பொது இடங்களில், சாலையோரங்களில் வைக்கப்படும் மரக்கன்றுகளை உள்ளாட்சி அமைப்பு மூலம் ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதில்லை. காரணம் அதற்கான ஊதியத்தை அமைப்புகள் வழங்கவில்லை.

இதனால், சாலையோரங்களில், பொது இடங்களில் வைத்த மரக்கன்றுகள் பட்டு போய் விட்டன. இதனால், மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் பயன் கிடைக்காமல் வீணாகி  விட்டன. மேலும், இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.900 கோடி நிதி கீழ் நிலை ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை முறைகேடு செய்ய தான் பயன்பட்டன என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நடப்பாண்டில் 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் வாங்கப்பட்ட மரக்கன்றுகள் நடப்படுமா, முறையாக பராமரிக்கப்படுமா? அல்லது அந்த நிதி முழுவதும் ஸ்வாகா செய்யப்படுமா என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கன்று நட்டதற்கு பில் இருக்கு... வளர்ந்த மரங்கள் தான் இல்லை...

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2012ல்  மரக்கன்று நடும்  திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 92 லட்சம்  வனத்துறை மூலம் செலவழிக்கப்பட்டுள்ளது. ஒரு மரக்கன்று நடவுசெய்ய 34   வீதம் இரண்டு லட்சம் மரக்கன்றுகளுக்கு  ₹68 லட்சம், மூன்று மாதங்கள்  மாதங்கள் தண்ணீர் விட்டு பராமரிக்க 12 வீதம், இரண்டு லட்சம்  மரக்கன்றுகளுக்கு 24 லட்சம் என மொத்தம் 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் எந்ததெந்தப் பகுதியில் எவ்வளவு மரக்கன்றுகள்  நடப்பட்டது என்ற தகவல் தெரிவிக்கவில்லை. இதன் மூலம் முறைகேடு நடந்து  இருப்பது தெரிய வந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2017-18ல் 80 லட்சம் செலவில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இந்த நிதியை கொண்டு மரக்கன்றுகள் நடாமல் மோசடி  செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டு    மரக்கன்று எண்ணிக்கை

2013    65 லட்சம்

2014    66 லட்சம்

2015    67 லட்சம்

2016    68  லட்சம்

2017    69 லட்சம்

2018    70 லட்சம்

2019    71 லட்சம்

2020    72 லட்சம்

மொத்தம் 5.48 கோடி மரக்கன்றுகள்

கோவை கூத்து

2014ம் ஆண்டு கோவை வன  மண்டலத்துக்குட்பட்ட தொண்டாமுத்தூர், அன்னூர், சின்னதடாகம், மருதூர்,  கார்யாம்பாளையம், தாராபுரம், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்,  பேரூர். சிறுமுகை, பிச்சனூர் உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேக்கு, வேம்பு  உள்பட பல்வேறு மரக்கன்றுகள் நட 33 லட்சத்து 66 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை கொண்டு 1.70 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு  திட்டமிடப்பட்டது. ஆனால், மரங்கள் நடப்படவில்லை என்று கூறப்படுகிறது.  குறிப்பாக, பிச்சனூர் கிராமத்தில் மரங்கள் நடப்பட்டதாக கூறி 12 போலி  பில்கள் தயாரித்து 10.77 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது.

Related Stories:

>