ஜெயலலிதா பிறந்த நாளில் திடீர் திருப்பம் அரசியல் களத்தில் குதித்தார் சசிகலா: அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு; பீதியில் மூத்த தலைவர்கள்

சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளில் தனது மவுனத்தை கலைத்து சசிகலா அரசியலில் குதித்திருப்பது அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. மேலும் அதிமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்து வெளியில் வந்த சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்தனர். பெங்களூருவில் இருந்து 23 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார்.

அதன்பின்பு அவரைப் பற்றி பெரிய அளவில் எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் பாஜ தலைமையிடமும் கூட்டணி குறித்து பேசி வருவதாக தகவல்கள் கசிந்தன. அப்போது, தனது ஆதரவாளர்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பாஜ கூட்டணியில் அமமுகவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தலைமை சசிகலாவை மீண்டும் சேர்த்து கொள்ள முடியாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் பாஜ தலைமை  இதுவரை ஒரு முடிவை சசிகலாவிடம் அறிவிக்கவில்லை.

இதனால் பாஜ தலைமை என்ன முடிவெடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் தனது அரசியல் ஆட்டத்தை சசிகலா இன்னும் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தோழி சசிகலா நேற்று தி.நகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சசிகலா தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சசிகலா தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக முன்னெடுப்பாரா என்று எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: ஜெயலலிதா 73வது பிறந்தநாளை கொண்டாட வந்த கட்சி தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் கொரோனாவில் இருந்து, நலம் பெற்று தமிழகம் வந்தேன். தமிழக சட்டமன்ற தேர்தலில், ஜெயலலிதா நமக்கு சொல்லிவிட்டு சென்றவாறு, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நமது ஆட்சி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறி சென்றுள்ளார். அதுவே நமது இலக்காக இருக்க வேண்டும்.

அதை மனதில் நிறுத்தி நமது தொண்டர்கள் ஒன்றிணைந்து இந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனென்றால் நீங்கள் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள். நிச்சயமாக இதை செய்வீர்கள். நானும் உங்களுக்கு துணை இருப்பேன் என்று அன்போடு நன்றி கூறுகிறேன். விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் சசிகலா தனது மவுனத்தை கலைத்து அரசியல் ஆட்டத்தை தொடங்கி இருப்பதால் அதிமுக மூத்த தலைவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாகவும் நமது ஆட்சி இருக்க வேண்டும்.

Related Stories: