தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு 10ம் வகுப்பு தேர்வு நடத்த திட்டம்: பள்ளிக் கல்வித்துறை முடிவு

சென்னை: தேர்தலுக்கு பிறகு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு தேர்வு அட்டவணைகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனைத்து பாடப் பகுதிகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்காக 12,500 பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. எனவே, கொரோனா காலத்துக்கு பிறகு 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி திறப்பு தாமதம் காரணமாக, பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுகள் மே 3ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு எப்போது தேர்வு தொடங்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பத்தாம் வகுப்புக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏப்ரல் இறுதி வாரம் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் காணொலி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடையே பேசினார். அப்போது, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்களை ஏப்ரல் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தவிர, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு, சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும் என்றும் தேர்தலுக்கு பிறகு தேர்வு அட்டவணை வெளியிட பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு, சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு நடத்தப்படும்.

Related Stories:

>