சசிகலா-சரத்குமார் திடீர் சந்திப்பு:அமமுகவுடன் இணைந்து போட்டியிட திட்டம்

சென்னை:  சென்னை வரும்போது நடந்த ரோடு ஷோவை பார்த்து ஆச்சரியப்பட்ட சசிகலாவுக்கு அந்த சந்தோஷம் ஒரே ஒருநாளுடன் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு தி.நகர் வீட்டு பக்கம் அதிமுக நிர்வாகிகள் யாரையும் காணோம். அதேசமயம், சசிகலா வெகு எச்சரிக்கையாக அரசியலில் காய்களை நகர்த்தி வந்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தி.நகர் இல்லத்தில் அவரது உருவபடத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். அப்போது பேசிய அவர், ‘‘அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமார் நேற்று சசிகலாவை தி.நகர் இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத்குமாருடன் அவரது மனைவி ராதிகாவும் உடன் சென்றிருந்தார்.

இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் ஒன்றிரண்டு சீட் தந்தால் போட்டியிட மாட்டோம் என்றும், அதிக சீட் தரும் கூட்டணியில் இணைந்து போட்டியிடவும் தயார் என்றும் சரத்குமார் கூறி வந்தார். ஆனாலும் தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருப்பதாகவே சரத்குமார் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் சசிகலா உடனான இந்த திடீர் சந்திப்பால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி சசிகலாவுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க சமக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இல்லாவிட்டால் அரசியல் சூழ்நிலையை பொறுத்து அமமுகவுடன் இணைந்து சரத்குமார் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.  சசிகலாவுடனான சந்திப்புக்கு பின்பு சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வந்துள்ள சசிகலாவை உடல் நலம் விசாரிப்பதற்காக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்துள்ளோம்.

இப்போது நேரில் வந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். 10 ஆண்டு காலம் அதிமுக கூட்டணியில் இருந்து வருகிற சமக, ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவை சந்திக்கும் போதெல்லாம் சசிகலாவும் அவருடன் இருந்திருக்கிறார். எனவே எங்களை பொறுத்தவரை, ‘நன்றி மறப்பது நன்றன்று, நன்று அல்லது அன்றே மறப்பது நன்று’ என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் பயணித்த அந்த காலங்களை நினைவு கூறி அவருடன் பேசினோம்.  நல்ல குணமடைந்து மீண்டும் மக்கள் சேவையை செய்ய வேண்டும் என்பதை அவருடன் கலந்தாலோசித்தோம். கூட்டணி பேச்சுவார்த்தையா என்று கேட்கறீர்கள். அவருடன் மரியாதை நிமித்தமாக மட்டுமே பேசினோம். ஒன்றிரண்டு சீட் கொடுத்தால் கூட்டணி வச்சிக்க மாட்டேன் என்று தான் சொல்லியிருந்தேனே தவிர, அதிகமான சீட் தருபவர்களுடன் கூட்டணி வைத்து கொள்வேன் என்று நான் சொல்லவில்லை. அப்படி இல்லாவிட்டால் தனியாக நிற்கவும் நாங்கள் தயார் என்று தான் செல்லியிருந்தேன். என்னைப் போன்று ஓபிஎஸ், இபிஎஸ்சும், சசிகலாவுடன் நல்ல உறவில் தான் இருந்திருப்பார்கள். அவர்கள் எப்படி சசிகலாவிடம் பேசப் போகிறார்கள் என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலாவை சந்தித்த பிரபலங்கள்

பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலா நேற்று முன்தினம் வரை யாரையும் சந்திக்காமல் இருந்தார். இதனால் சட்டமன்ற தேர்தலில் அவரது பங்கு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்தது. இந்நிலையில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு தனது அரசியல் ஆட்டத்தை சசிகலா தொடங்கியுள்ள நிலையில் அவரை அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் சந்தித்து வருகின்றனர். சரத்குமாரை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். மேலும் முக்கிய புள்ளிகள் பலர் அவரை சந்திக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: