படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்த ராகுல்: கடலில் குதித்து நீச்சல் அடித்தார்

திருவனந்தபுரம்: கேரளாவில் மீனவர்களுடன் படகில் சென்று ராகுல் காந்தி வலைவீசி மீன் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி சமீப காலமாக மக்களுடன் கலந்து உரையாடுவது, சமைப்பது போன்ற தனது எளிமையாக செயல்களால் மக்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில், தமிழகத்தில் பயணம் செய்த அவர், கிராமத்து இளைஞர்களுடன் இணைந்து சமையல் செய்தும், அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார். இது, சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் ரைவலானது. தற்போது அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இதே பாணியை பின்பற்றி வருகிறார். இந்நிலையில், கேரளாவில் நேற்று சுற்றுப் பயணம் சென்ற அவர், நேற்று அதிகாலை கொல்லம் மீனவர்களுடன் படகில் மீன்  பிடிக்க கடலுக்கு சென்றார்.

இரண்டரை மணி நேரம் அவர்களுடன் இருந்த அவர், நடுக்கடலில் மீனவர்களுடன் சேர்ந்து  வலை வீசி மீன் பிடித்தார். கடலில் குதித்து சாகசத்திலும் ஈடுபட்டார். மீனவர்கள் சமைத்த உணவையே  சாப்பிட்டார். அவர் எந்த பந்தாவும் இல்லாமல் தங்களுடன் சகஜமாக பழகியது, மீனவர்களுக்கு அவர் மீது நல்ல ஈர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  சமீபத்தில், அமெரிக்க நிறுவனத்திற்கு  ஆழ்கடலில் மீன் பிடிக்கும் உரிமையை கேரள அரசு வழங்கியதை கண்டித்து, மீனவர்கள் போராட்டம் நடத்தி  வருகின்றனர். இந்நிலையில், ராகுல்  காந்தியின் இந்த செயலால் மீனவர்களின் பார்வை காங்கிரஸ் பக்கம்  திரும்பியுள்ளது.  

இம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரசுக்கு இது மிகப்பெரிய அளவில் ஆதாயத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவனந்தபுரம், கொல்லம்  உள்பட பல்வேறு பகுதிகளில் மீனவர்களின் வாக்குகளே வெற்றி, தோல்வியை  நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>