உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான படேல் ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி என மாற்றம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

அகமாதாபாத்: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தின் பெயர் மாற்றப்பட்டு, பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. பொதுவாக, ‘மோதிரா ஸ்டேடியம்’ என்றே அழைக்கப்படும் இந்த மைதானம், 1982ம் ஆண்டு கட்டப்பட்டது. கடந்த 2015ல், உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான மறுசீரமைப்புப் பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன. இந்நிலையில், இந்த மைதானத்தின் பெயர் நரேந்திர மோடி என பெயர் மாற்றம் செய்து நேற்று திறக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மைதானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். விழாவில் பேசிய அமித்ஷா, ‘‘இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டம். எனவே, மைதானத்திற்கு அவரது பெயரை சூட்டுவதே பொருத்தமாக இருக்கும்’’ என்றார்.

முதலில் 49,000 பேர் அமரும் வகையில் இருந்த மைதானம், மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 1.32 லட்சத்துக்கும் அதிகமானோர் அமரும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக இது உருவெடுத்துள்ளது.  இதற்கிடையே, படேல் பெயருக்கு பதிலாக பிரதமர் மோடியின் பெயர் ஸ்டேடியத்திற்கு சூட்டப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. படேல் பெயரை மாற்றி அவரை பாஜ அவமதித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் சசிதரூர், ராஜீவ் சாதவ், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டிவிட்டரில் பதிவிட்டனர்.

நாம் இருவர் நமக்கு இருவர் எவ்வளவு ஒத்துப் போகிறது

மோடி பெயர் சூட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 2 கேலரிகளுக்கு அதானி, ரிலையன்ஸ் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன. இது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நாம் இருவர், நமக்கு இருவர் என்ற உண்மை எவ்வளவு அழகாக வெளிவருகிறது பார்த்தீர்களா? நரேந்திர மோடி ஸ்டேடியம், அதானி முனை, ரிலையன்ஸ் முனை. ஜெய் ஷாவின் நிர்வாகம்...’ என கூறியுள்ளார். குஜராத் கிரிக்கெட் தலைவராகவும், பிசிசிஐ செயலாளராகவும் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா இருப்பது குறிப்பிடத்தக்கது. ‘எதுவும் செய்ய முடியாவிட்டால் பெயரை மாற்றுங்கள்’ என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் வேதனை தெரிவித்துள்ளார்.

பாஜ விளக்கம்

பெயர் மாற்ற விவகாரம் சர்ச்சையான நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோதிரா ஸ்டேடியத்தின் பெயர் மட்டுமே நரேந்திர மோடி ஸ்டேடியம் என மாற்றப்பட்டுள்ளது. ஆனால், ஒட்டுமொத்த வளாகத்திற்கும் சர்தார் படேல் பெயர் எப்போதும் போல் இருக்கும். அது மாற்றப்படவில்லை. இந்த வளாகத்தில் மேலும் பல விளையாட்டு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories:

>