நாடு முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கும் தடுப்பூசி: இணை நோயுள்ள 45 வயதினருக்கும் போடப்படும் : தனியாரிடம் கட்டணம் செலுத்தி போட அனுமதி

புதுடெல்லி: நாடு முழுவதும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ள 45 வயது தாண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதியும் முதல் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, முதல் தவணை தடுப்பூசியும் 28 நாட்களுக்குப் பிறகு 2வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க, வரும் மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது.

 கூட்டத்திற்குப் பின் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியின் 2ம் கட்டம் வரும் திங்கட்கிழமை (மார்ச் 1) முதல் தொடங்க உள்ளது. இதில், நாடு முழுவதும் உள்ள 10 கோடி எண்ணிக்கையிலான 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்படும். மேலும், இணை நோயுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் அவரவர் விரும்பும் இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதுவரை எந்த தவறுகள் குறித்து புகார்கள் எழவில்லை. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்படும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம். இப்பணியில், 10 ஆயிரம் அரசு மருத்துவ மையங்களும், 20 ஆயிரம்  தனியார் மருத்துவமனைகளும் ஈடுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மேலும் கூறுகையில், ‘‘பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.

மோடி போட்டுக் கொள்வாரா?

தடுப்பூசி விவகாரத்தில் மக்கள் மத்தியில் அச்சத்தை போக்க, பிரதமர் மோடி முதல் நபராக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், 60 வயது தாண்டியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட இருப்பதால், இம்முறை பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொள்வாரா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜவடேகர், ‘‘பல நாடுகளில் பிரதமர்கள், அமைச்சர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நம்மை பொறுத்த வரையில் முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதுதான் நோக்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புபவர்கள், அவர்கள் விரும்பும் இடத்தில் போட்டுக் கொள்ளலாம்’’ என்றார்.

1.07 கோடிபேருக்கு தடுப்பூசி

* கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி இந்தியாவில் தொடங்கியது

* இதுவரை 1 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 14 லட்சம் 2ம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

* உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

Related Stories:

>