பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு

சென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவையில் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க  முடியாததால் முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்தார். இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதற்கான அரசாணை புதுச்சேரி அரசிதழிலில் தலைமை செயலரால் வெளியிடப்பட்டது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி நாளை (25ம்தேதி) புதுச்சேரி வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.20 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையம்  வந்தடைகிறார். அங்கு அவருக்கு மத்திய அமைச்சர்கள், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் பிரதமர் மோடி கார் மூலமாக கோரிமேடு ஜிப்மர் ஆடிட்டோரியம் செல்கிறார்.

அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். காரைக்காலை உள்ளடக்கிய விழுப்புரம் சதானந்தபுரம் நாகப்பட்டினம் 4 வழிச்சாலையை ₹2,426 கோடியில் அமைப்பதற்கான பணிக்கு  அடிக்கல் நாட்டுகிறார். இதில் சீர்காழி சட்டநாதபுரம்  முதல் நாகை வரையிலான 56 கிமீ தூர பணிகள் தொடங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து காரைக்கால் ஜிப்மர் கிளை மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.  அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்பணியானது ₹491 கோடியில் நடைபெற உள்ளது.

விழா முடிந்து காரில் புறப்பட்டு, லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி  உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணிக்காக அதிவிரைவு படை கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையிலான 120 பேர் கொண்ட குழுவினர் நேற்று புதுச்சேரி வந்து வழிநெடுகிலும் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே கிரண்பேடி  பாதுகாப்புக்காக தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பிரதமரின் கார் வந்து செல்லும் ஏர்போர்ட் சாலை, இசிஆர் ரோடு, காமராஜர் சாலை பகுதியில் தடுப்பு வேலிகள்  அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்த மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து நாளை முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜிப்மர் ஆடிட்டோரியம், பொதுக்கூட்ட மேடை உள்ளிட்டவை  முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.கூட்டம் முடிந்து பகல் 1.20 மணிக்கு ெஹலிகாப்டர் மூலம் அவர் மீண்டும் சென்னை செல்கிறார். மதியம் 2.10 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு 3.35  மணிக்கு வருகிறார். கோவை கொடிசியா அரங்கத்தில் நெய்வேலி லிக்னைட் நிறுவனம், குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை, மின்வாரிய திட்டங்களை துவக்கி வைத்து பேசுகிறார்.

மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் நடக்கும் பா.ஜ. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் தமிழக பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை நகருக்கு சீல் வைத்து போலீசார்  பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.18 ஐஏஎஸ் அதிகாரிகள், டி.ஜி.பி, சிறப்பு டிஜிபி, 5 ஐஜிக்கள், 17 எஸ்.பி.க்கள், 38 கூடுதல் எஸ்.பி.க்கள், 48 டி.எஸ்.பி.க்கள், உதவி கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நேற்று முதல் 5  ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மேலும், 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள்.

இதுதவிர பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி) கமாண்டோக்கள் 30 பேர் கோவை வந்துள்ளனர். குண்டு துளைக்காத 4 கார்களும் வரவழைக்கப்பட்டு விருந்தினர் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மண் தோண்டிய  இடங்களில் மெட்டல் டிடெக்டர், மைன்ஸ் ஸ்வீப்பர் கருவிகள் மூலமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், வடிகால் பகுதிகளிலும் கண்காணிப்பு கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு  கண்டறியும் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, கொடிசியா வளாகம் செல்லும் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வணிக, வர்த்தக நிறுவனங்கள் போலீஸ் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கி  உள்ள நபர்கள், வாரண்ட் குற்றவாளிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>