வாங்கிய ரூ.5 லட்சத்தை தராமல் மிரட்டல் பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் பாலியல் புகார்

விழுப்புரம்:விழுப்புரம் எஸ்பியிடம் பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் பாலியல் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காயத்திரி. இவர் நேற்று விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நான் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு, அரசு திட்டங்கள் பெற உதவுவது, தீபாவளி பண்ட் சீட் போன்ற பொதுப்பணிகளை செய்து வருகிறேன். தற்போது பா.ஜ.க மாவட்ட தலைவராக உள்ள கலிவரதன், எனக்கு பா.ஜ.கவில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு வாங்கி தருவதாக கூறினார். நான் மறுத்துவிட்டேன். ஆனால் கலிவரதன் என்னை கள்ளக்குறிச்சி மகளிரணி பொதுச்செயலாளர் என போஸ்டர் அடித்துள்ளார்.

என் கணவர் கண்டிப்பதை அறிந்த கலிவரதன், அவர் கூறுவதுபோல் நடக்காவிட்டால் என் குடும்பத்தை அழிப்பதாக மிரட்டினார். பின்னர் என்னை கட்சி பணிக்கு அழைத்து செல்லும் செயலில் ஈடுபட்டதை எங்களால் தடுக்க முடியவில்லை. மேலும் தீபாவளி பண்ட், பட்டாசு மற்றும் நகைகளை குறைந்த விலையில் செய்து தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு தற்போது வரை தரவில்லை. மேலும் மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருவதாகவும், கவுன்சிலர் சீட் வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் ரூபாய் தர சொல்லி கட்டாயப்படுத்தி பெற்றுக் கொண்டார். மேலும் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் என்னிடம் தகாத உறவு கொண்டார். அதை மொபைலில் படம் எடுத்து கொண்டு என்னை மிரட்டினார். குடும்ப நெருக்கடியால் கொடுத்த பணம் 5 லட்சம் ரூபாயை கேட்டபோது எங்களை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories:

>