அதிமுக கவுன்சிலர் கொலை வழக்கில் அமமுக பிரமுகர் உள்பட 5 பேர் கைது: மேலும் 5 பேருக்கு வலை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் ராஜேஷ்(38) நேற்றுமுன்தினம் அதிகாலை தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நேற்றுகாலை முத்துப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ராஜேஷ் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். அவர்களை தனிமையில் வைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களது போட்டோவையாவது காண்பித்தால் மட்டுமே நம்புவோம் என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து ஒரு சிலரிடம் மட்டும் போட்டோவை காண்பித்து கைது நடவடிக்கையை போலீசார் உறுதிபடுத்தினர். இதையடுத்து உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதித்ததால் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலிருந்து ராஜேஷ் உடல் நேற்று மதியம் ஆம்புலன்சில் எடுத்துவரப்பட்ட நிலையில் முத்துப்பேட்டை அருகே கோபாலசமுத்திரம் பகுதியில் அந்த வாகனத்தை அவரது ஆதரவாளர்கள் நிறுத்தினர். ராஜேஷ் உடலை ஆலங்காடு பகுதியிலிருந்து ஊர்வலமாக சுமந்து முத்துப்பேட்டை கடைத்தெரு வழியாக எடுத்துச்செல்ல போலீசாரிடம் அனுமதி கேட்டனர். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என மறுப்பு தெரிவித்த போலீசார் பின்னர் வாகனங்களிலேயே செல்ல அனுமதி அளித்தனர்.

ராஜேஷ் கொலை தொடர்பாக கோவிலூர் பகுதியை சேர்ந்த அமமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகன்(48), யோகேஸ்வரன்(32), அருண்குமார்(32), அஜித் (30), செந்தில்ராஜா(40) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுக்கூர் அதிமுக ஒன்றிய செயலாளர் கல்யாண ஓடை செந்தில், கோவிலூர் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் குறிஞ்சிவேந்தன் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>