பிராணயாமா, அக்னிஹோத்ரா செய்தாலே போதும் நான் முகக்கவசம் அணிய மாட்டேன்: அடம் பிடிக்கும் மத்தியபிரதேச பெண் அமைச்சர்

போபால்: ‘பிராணயாமா, அக்னிஹோத்ரா செய்தாலே போதும்; மற்றபடி நான் முகக்கவசம் அணிய மாட்டேன்’ என்று மத்திய பிரதேச பெண் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அச்சுறுத்தி வரும் நிலையில், மத்திய பிரதேசத்திலும் கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க, அம்மாநில அரசால் பல கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், முகக் கவசம் கட்டாயம் என்று வலியுறுத்தும் நிலையில், அவற்றை அணிய மாநில பாஜக அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ  ரம்பாய் ஆகியோர் மறுத்து வருகின்றனர்.

நேற்று சட்டசபை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இருவரும் முகக்கவசம் அணியவில்லை. அப்போது உஷா தாக்கூர் கூறுகையில், ‘​​நான் வேத வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிறேன். எனவே நான் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை. சூரிய  உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்தில் வீடுகளில் அக்னிஹோத்ரா செய்து  வீட்டை தூய்மையாக வைத்திருக்கிறேன். எனது முழு குடும்பமும் இதனை பின்பற்றுகிறது. சூரிய அஸ்தமன நேரத்தில்  துர்கா சப்தாஷதி மற்றும் அனுமன் சாலிசா ஆகியவற்றை ஓதுகிறேன். இவ்வாறு பிராணயாமா செய்வதன் மூலம் மூச்சுப்  பயிற்சி கிடைக்கிறது. அக்னிஹோத்ரா செய்வதால் நாம் இருக்கும் சூழலில் நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்க முடிகிறது.

இவ்வாறு செய்வதால், நுரையீரலுக்கு மிகவும் நல்லது. அதேபோல், நல்ல உடற்பயிற்சி மேற்கொள்கிறேன். ஒரு நிமிடம் தொடர்ந்து சங்கு ஊதினால் கூட போதும், நுரையீரல் விரிவடைந்து நன்மை பயக்கும். இதனை விஞ்ஞானம் ஏற்றுக்  கொள்கிறது. இரண்டு மீட்டர் தூர இடைவெளியில் தான் நான் மற்றவரிடம் பேசுகிறேன். இதற்குப் பிறகும், யாராவது எனது அருகில் வந்தால், நான் எனது முகத்தை மறைத்துக் கொள்வேன். மற்றபடி எனக்கு முக்கவசம் தேவையில்லை’  என்றார்.

அமைச்சர் உஷா தாக்கூர் இவ்வாறு கூறிய நிலையில் எம்எல்ஏ ரம்பாய் முகக்கவசம் அணியாதது குறித்து கூறுகையில், ‘முக்கவசம் அணிந்தால் எனக்கு தலைச்சுற்றல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாந்தி வருகிறது. எனவே அதனை நான்  அணியவில்லை. மற்றபடி நான் என்னை தற்காத்துக் கொள்கிறேன்’ என்றார். முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும்நிலையில், அமைச்சரும், எம்எல்ஏவும் புது விளக்கம் கொடுத்து இருப்பது  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>