சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதை மாத்திரை, ஊசிகளால் தள்ளாடும் புதுகை: தஞ்சை, புதுவையிலிருந்து சப்ளை; சீரழியும் இளைஞர்களால் எதிர்காலம் கேள்விகுறி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை, போதை ஊசி விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனால் புதுக்கோட்டை நகரம் போதை நகரமாக மாறிவருகிறது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் போதை மாத்திரைகள், ஊசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக போலீசார்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து சிலரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். குறிப்பாக புதுக்கோட்டை கணேஷ்நகர் மற்றும் திருக்கோகர்ணம், டவுன் காவல் சரகங்களில் போதை மாத்திரை மற்றும் ஊசி பயன்படுத்துவோர்கள் மீது வழக்கு பதிவு மற்றும் கைது நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 5க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்து கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 18ம் தேதி போதை மாத்திரை விற்றதாக புதுக்கோட்டை அடுத்த மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (23) என்பவரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள், 3 ஊசிகளை, 4 தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் இரவு போதை மாத்திரை வைத்திருந்ததாக மச்சுவாடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (23) என்பவரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்து போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

மச்சுவாடி பகுதி உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமையாகி போதை பொருட்களை பயன்படுத்தும் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் போதை நகரமாக மாறி வருகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை தொடர்ந்தாலும் போதை மருந்து, மாத்திரை, ஊசி விற்பனை தொடர்கதையாக இருந்து வருவதாக போலீசார் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: புதுக்கோட்டை நகர் பகுதியில் சிலர் போதை ஊசி போட்டுக்கொளுவதில் அடிமையாக இருந்து வருகின்றனர். 20 வயதில் இருந்து 25 வயதிற்குட்பட்டோர் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து, இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் பலருக்கு மஞ்சள் காமாலை தாக்கியுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் கைதுசெய்பவர்களிடம் அதிக அளவில் மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்வதில்லை. இரண்டு முதல் பத்து மாத்திரைகள் தான் அவர்கள் வைத்திருக்கிறார்கள். அவர்களை பிடித்து விசாரித்தால் இவர்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் தஞ்சாவூர் மற்றும் பான்டிச்சேரியில் இருந்து வருகிறது.

ஆனாலும் போதை மாத்திரையுடன் வாலிபர்கள் கைதாகும் பகுதிகள், சந்தேகத்திற்கு இடமாக உள்ள மருந்துகடைகளுகளுக்கு போலீஸ் தரப்பில் ஆட்களை அனுப்பி சோதனை செய்து பார்க்கிறோம். ஆனாலும் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் பயன்பாடு என்பது இருந்து கொண்டே இருக்கிறது. அதிக போதை தரும் மாத்திரைகள் கிடைக்கவில்லை என்றால் தூக்கம் வரும் மாத்திரைகளை அதிகம் வாங்கி அதனை பொடியாக்கி நேரடியாக தண்ணீரில் கலந்து நரம்பில் ஏற்றிக்கொள்கின்றனர். இதனை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டுமென்றால் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. தொடர்ந்து, போதை மாத்திரைகள் எங்கு விற்கப்படுகிறது.

யார் மூலம் விற்கப்படுகிறது. புதுக்கோட்டையில் போதை ஊசி விற்கும் கும்பல் ஊடுருவியுள்ளதா என போலீசார் ஏற்கனவே பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போதை மாத்திரை மற்றும் ஊசிகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகி உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ள சொந்த மாவட்டத்திலேயே போதை மாத்திரை மற்றும் ஊசிகள் விற்பனை தாராளமாக நடப்பதுதான். சுகாராத்துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் ஏராளமான இளைஞர்களின் எதிர்க்காலத்தை காப்பாற்ற முடியும்.

தடுக்கும் முறைகள்

மருந்துகடைகளில் மருத்துவர் பரிந்துரை, மருந்து சீட்டு இன்றி மாத்திரைகள் விற்பனை செய்ய கூடாது என்ற விதிமுறை உள்ளது. மேலும், கடையில் மருந்தாளுநர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் இருப்பதில்லை. பெரும்பாலான மருந்து கடைகளில் மருந்து சீட்டு இல்லாமலே மாத்திரை, மருந்துகளை வினியோகின்றனர். பல மருந்தகங்களில் 10 மற்றும் 12 வகுப்பு படித்தவர்கள் ஊசி போடுவது, செலைன் ஏற்றுவது என விதிகளை மீறி செயல்படுகின்றனர். இது போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கு சாதகமாக உள்ளது. போதை தரும் மாத்திரை கலந்து போட்டு போதையில் மிதக்கின்றனர். இதை தடுக்க, எந்தெந்த மாத்திரைகளை போதை ஆசாமிகள் பயன்படுத்துவார்களே அந்த மாத்திரைகளை ஆதார் அடையாள அட்டை நகலை வாங்கிகொண்டு மருந்து கடைகளில் விற்பனை செய்யலாம். பின்னர், ஆதார் அட்டை நகலை மருந்தகங்கள் உரிமையாளர்கள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தால், அந்த முகவரியில் உள்ளவர்களை போலீசார் நோட்டமிட்டு அந்த மாத்திரைகளை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கு ஏற்றார்போல் நடவடிக்கையை மேற்கொண்டால் கட்டாயம் தடுக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கண்காணிப்பில் கோட்டை விடும் போலீஸ்

போதை மாத்திரைகள் வைத்திருக்கும் நபர்களை கைது செய்யும் போலீசார் அவர்களை தீர விசாரிக்காமல் விட்டுவிடுகின்றனர் என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவை எப்படி கிடைக்கிறது. விற்பவர்கள் யார். எந்தந்த பகுதியில் கிடைக்கிறது என தீர விசாரித்தால் கண்டிப்பாக ஓரளவிற்கு போதை மருந்து பயன்பாடு குறையும். இதேபோல் சிறையிலிருந்து வெளியே வரும் போதை இளைஞர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் போலீசார் கோட்டை விடுகின்றனர். இதனால் போதை மருந்து, ஊசி புழக்கம் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நரம்பில் போதை ஊசி

போதை தரும் மாத்திரையை இரண்டுக்கு மேல் எடுத்து அதை பொடியாக்கி அதனை சைலைன் தண்ணீரில் கலந்து அதனை சிரஞ்ச் மூலம் நேரடியாக நரம்பில் ஏற்றிக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் குறிப்பிட்ட மணி நேரம் தன்னை மறந்து போதையில் இருக்கின்றனர். போதை மருந்தை சிரஞ்சியில் ஏற்றும் பணியை ஒருவர் செய்வார். இதேபோல் கூட்டாக சேரும் இளைஞர்கள் சிரஞ்சியில் ஏற்றி வைத்துகொண்டு அவர்களுக்குள்ளே மாறி, மாறி ஊசியை நரம்பில் போட்டுக்கொள்கின்றனர்.

Related Stories: