மானாமதுரை அருகே திருமண பரிசாக மணமக்களுக்கு பெட்ரோல்

மானாமதுரை: மானாமதுரை அருகே நடந்த திருமணத்தில் மணமக்களுக்கு கல்யாணப் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கிய சம்பவம் வாட்சப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. வடமாநிலங்களில் பெட்ரோல் ரூ.100ஐ தாண்டிய நிலையில், தமிழகத்திலும் அதனை எட்டிவிடும் சூழலில் உள்ளது. இது பொதுமக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடித்தட்டு மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் முடிவு செய்தனர். அதன்படி மானாமதுரை அருகே கல்குறிச்சி ஆலங்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் தவசி - கார்த்திகா ஆகியோரின் திருமணத்தில் தவசியின் நண்பர்களான விஜய், அருண், பாலா உள்ளிட்டோர் கல்யாணப் பரிசாக ஒரு லிட்டர் பெட்ரோலை பரிசாக வழங்கினர்.

இதுபற்றி செய்தி வாட்சப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘மத்திய, மாநில அரசுகள் இணைந்து விதிக்கும் வரியால் நடுத்தர மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ரூ.70ல் இருந்த பெட்ரோல் தற்போது ரூ.93.69 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நடுத்தர ஏழை தம்பதியருக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும். இந்த திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் விலை உயர்வை தெரிவிக்க வேண்டும் என்று தான் பரிசாக பெட்ரோலை கொடுத்தோம்’’ என்றனர்.

Related Stories:

>