தேர்தல் களத்தில் எதிரொலிக்க வாய்ப்பு: பயணிகள் ரயில் இயக்காததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமா?

நெல்லை: தமிழகத்தில் பாசஞ்சர் ரயில்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகள் கடும் திண்டாட்டத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து பயணிகள் சங்கத்தினர் மனு அளித்து வருகின்றனர். மத்தியில் பாஜ அரசு வந்த நாளில் இருந்தே ரயில்வே துறை முற்றிலுமாக முடக்கப்பட்டு வருகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, தனியார் மயம் புகுத்தப்பட்டது. அதை தொடர்ந்து வருவாய் அதிகமுள்ள வழித்தடங்களில் இயங்கி வரும் ரயில்கள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில் இயக்கமும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு தளர்வில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கம் குறித்து ரயில்வே சார்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பயம் நீங்கி தற்போது சகஜநிலை வந்துவிட்டது. அனைத்து அலுவலகங்களும், பஸ் போக்குவரத்து உள்ளிட்டவை முன்பு போல முழுவீச்சில் இயங்கி வருகின்றன. ஆனால் பாசஞ்சர் ரயில்கள் இயக்கத்தை மட்டும் தெற்கு ரயில்வே கொரோனாவை காரணம் காட்டி தொடர்ந்து தள்ளிப்போட்டு வருகிறது.

பயணிகள் ரயில் இயங்காததால் ஏழை, நடுத்தர பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ரயில்கள் இயங்காததால் பயணிகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். ரயில்களில் பொருட்களோடு, மூட்டை, முடிச்சுகளோடு பழக்கப்பட்ட பொதுமக்கள், அவை இயங்காததால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.  சீசன்பாஸ் சலுகைகளையும் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளனர்.

நெல்லையை பொறுத்தவரை நெல்லை- திருச்செந்தூர், நெல்லை- செங்கோட்டை, நெல்லை- நாகர்கோவில், நெல்லை- தூத்துக்குடி மார்க்கங்களில் பாசஞ்சர் ரயில்கள் கடந்த ஓராண்டு காலமாக இயங்கவில்லை. விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் வரும் நிலையில், மக்களின் கோபம் மத்திய, மாநில அரசுகள் மீது திரும்பவும் வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் நெல்லை வந்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பயணிகள் ரயில்கள் இயக்கத்திற்கு வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என தெரிவித்துள்ளார். லாபநோக்கத்தோடு, எக்ஸ்பிரஸ் ரயில்களை மட்டுமே இயக்கினால், சாதாரண பயணிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. பாசஞ்சர் ரயில்களை இயக்க கோரி தொடர்ந்து பயணிகள் சங்கத்தினர் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை சந்தித்து மனு அளித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பயணிகளின் கஷ்டங்களை புரிந்து தேர்தலுக்கு முன்பாக பயணிகள் ரயில்களை இயக்க முன்வர வேண்டும்.

Related Stories:

>