குமரியில் வருவாய்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் எதிரொலி: 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் தேக்கம்; இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தவர் காத்திருப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் வருவாய்துறை ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முடியாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5ம் நாளாக வருவாய்துறை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய ஆறு தாலுகா அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலக வருவாய் பிரிவு, ஆர்டிஒ அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஊழியர்கள் போராட்டம் காரணமாக பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தாசில்தார்கள் முதல் உதவியாளர்கள் வரை பணிக்கு வரவில்லை. போராட்டம் தொடர்வதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை தொடங்கிய போராட்டம் இன்று 8 வது நாளாக தொடர்கிறது. இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வருவாய்துறை சார்பில் குமரி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 6 தாலுகா அலுவலகங்களிலும் பிற துறைசார்ந்த அலுவலகங்களிலும் 500க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் கையெழுத்து ஆகும். இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கின்ற சான்றிதழ்கள் வருவாய்துறை அதிகாரிகளிடம் சென்று ஒப்புதல் ஆகாமல் தேக்கமடைந்துள்ளது. இந்த சான்றிதழ்கள் இனி எப்போது வழங்கப்படும் என்று தெரியவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற நிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Related Stories: