காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை ஏற்க மாட்டோம் என மத்திய அரசிடம் கர்நாடகா புகார் :தேர்தல் ஆதாயத்திற்காகவே திட்டம் தொடக்கம் என சாடல்!!

டெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கர்நாடக அரசு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடமும் நேரில் புகார் அளித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் போது, வீணாக கடலில் கடக்கும் உபரிநீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்கு சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்திற்கு கர்நாடகத்தில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த மாநிலத்தின் நீர் பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிஹோலி , இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிடம் நேரில் புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் தேர்தலுக்காகவே இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கும் பணியை விரைவுப்படுத்தவும் கர்நாடக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக அமைச்சர் ரமேஷ்,தேர்தல் ஆதாயத்திற்காகவே காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. சட்ட அமைச்சர் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும்.அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு இறுதியானது. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை கர்நாடகா ஏற்க மாட்டோம்.காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை கோருவோம். மேகதாது அணை தொடர்பான விசாரணையின் போது, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தடை கோருவோம்,என்று கூறினார்.

Related Stories: