சேதமடைந்து கிடக்கிறது உயிர்பலி வாங்கும் நெடுஞ்சாலை-சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம் :  ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் வரை பல்லாங்குழியான தேசிய நெடுஞ்சாலையால் தினந்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலியாகி வருகிறது. ஒட்டன்சத்திரம்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக திண்டுக்கல், திருப்பூர், திருச்சி, பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி ஆகிய ஊர்களுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பேருந்துகள் சென்று வருகின்றன. கடந்த சில வருடங்களாகவே இந்த சாலையில் ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டு, அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக சாலைப்புதூர் ரயில்வே மேம்பாலம் முதல் புதுச்சத்திரம் வரை அதிகளவில் ஆளை விழுங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றது. தினந்தோறும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாகவே இந்த தேசிய நெடுஞ்சாலை அபாயகரமான நிலையில் உள்ளது.

ஒட்டனசத்திரம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் இந்த வழியாக தினந்தோறும் அரசு அதிகாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இச்சாலை மிகவும் சேதமடைந்து, எங்கே குழி இருக்கிறது என்று கூட  தெரியாமல் வாகன ஓட்டிகள் குழியில் விழுந்து, காயங்களுடன் செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் இந்த குழிகளில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதை கண்டும், காணாதவாறு இருக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் திண்டுக்கல்-ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள ஆள் விழுங்கும் பள்ளங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: