நீடாமங்கலம் பொதக்குடியில் வெண்ணாற்று கரையோரம் குப்பைகள் கொட்டும் அவலம்-தொற்று நோய் பரவும் அபாயம்

*இது உங்க ஏரியா

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகில் உள்ளது பொதக்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இவ்வூராட்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். அனைத்து வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகளை 6 மற்றும் 4வது வார்டு காந்தி தெரு சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள வெண்ணாற்று கரையில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளை சிலர் தீயிட்டு கொளுத்தும்போது அதனால் ஏற்படும் புகையால் சுகாதார கேடு ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் இங்கு வரும் கால்நடைகளும் குப்பைகளை தின்று உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.  நேற்று முன்தினம் சினை பசு மாடு ஒன்று குப்பைகளை தின்றுவிட்டு சேற்றில் சிக்கிக்கொண்டது. பசுவின் சத்தம் கேட்ட உடன் தமுமுக, மமக இளைஞர்கள் சென்று பசுவை பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இடவசதியின்றி ஆற்றுக்கரையில் கொட்டப்படும் குப்பையின் இடத்தை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்து அங்கு கொட்டப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து அதனால் உண்டாகும் தரமான உரத்தை விற்பனை செய்து ஊராட்சிக்கு கூடுதல் வருவாயை சேர்க்கலாம் என்றனர்.

Related Stories: