அதிமுக கூட்டணி உடைகிறதா?.. சரத்குமார், சீமான் உள்ளிட்ட பிரபலங்கள் சசிகலாவுடன் சந்திப்பு; முக்கிய அரசியல் புள்ளிகளும் சந்திக்க உள்ளதாக தகவல்!!

சென்னை : தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.  இதற்கு எடுத்துக் காட்டாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்திருக்கிறார். சரத்குமாரின் மனைவி ராதிகாவும் உடன் சென்றிருக்கிறார். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் சரத்குமார், அதிமுகவுக்கு எதிரியாக பார்க்கப்படும் சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக உற்று நோக்கப்படுகிறது.

சசிகலா உடனான சந்திப்புக்குப் பின் பேட்டி அளித்த சரத்குமார், நன்றி மறப்பது நன்றன்று..  என்ற அடிப்படையில் சசிகலாவை மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்தேன்; உடல்நலம் பற்றி விசாரித்தேன்,என்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார், “ஜெயலலிதா பிறந்தநாளன்று நாங்கள் சின்னம்மாவை சந்தித்துள்ளோம். புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி என்று தான் எனக்கு சசிகலாவை தெரியும். அந்த சகோதரியை நாங்கள் இன்று பார்க்க வந்துள்ளோம் . அவரது உடல் நலத்தைப் பற்றி இன்று விசாரிக்க வந்தோம் ” என்றார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்களும் அடுத்தடுத்து சசிகலாவை சந்தித்துள்ளனர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா,தமிழக அரசியலில் நிலவும் வெற்றிடத்தை நிரப்ப வந்துள்ளார் சசிகலா,என்றார். இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் சசிகலாவை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் உலா வருகின்றனர். தொடர்ந்து அரசியல் முக்கிய புள்ளிகள் சசிகலாவை சந்திக்க உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிமுக கூட்டணிகள் உடையும் ஆபத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>