பேரறிவாளன் விடுதலை வழக்கு 26ம் தேதி விசாரணை: அரசமைப்புக்கு முரணான ஆளுநரின் நடவடிக்கை: அற்புதம்மாள் ட்விட்..!

சென்னை: பேரறிவாளன் விடுதலை வழக்கு 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது. 7 பேர் விடுதலையில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அமைச்சரவை 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளனை விடுவிப்பது குறித்து இந்திய குடியரசு தலைவர்தான் முடிவுசெய்ய வேண்டுமென தமிழக ஆளுநர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை வழக்கு 26ல் விசாரணைக்கு வருகிறது என பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: அரசமைப்புக்கு முரணான ஆளுநரின் நடவடிக்கையை புறக்கணித்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி எடுத்த அமைச்சரவை முடிவை உறுதி செய்யும் பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. அதனை மூத்த வழக்கறிஞரை அமர்த்தி தமிழக அரசு நிறைவேற்றுமென நம்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: