73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரின் பிறந்த நாள் இந்தாண்டு முதல் அரசு விழாவாகவும், பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் மரியாதை செலுத்தினர். அத்துடன் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை முதல்வரும் துணை முதல்வரும் வெளியிட்டுள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டு 73 கிலோ கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடினர். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் ஒருவரை ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.

லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வரும், துணை முதல்வரும், ஜெயலலிதா நினைவிடத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் மெழுகு சிலையுடன் கூடிய அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவையும் திறந்து வைத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா வளாகத்திற்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நாடும் திட்டத்தை தொடக்கிவைத்தார். மேலும், அங்கு ஒரு மரக்கன்றை தனது கரங்களால் முதல்வர் பழனிசாமி நட்டு வைத்தார்.

Related Stories: