2014ல் பதவியேற்று ஆறரை ஆண்டுகள் முடியாத நிலையில் 10 ஆட்சிகளை கவிழ்த்த பாஜ: ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் தமிழகத்தை பிடித்து ‘சாதனை’

கடந்த 2014ம் ஆண்டில், நாடு முழுவதும் மோடி அலை வீச பாஜ கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதைத் தொடர்ந்து மோடி அலை மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வீச, அடுத்தடுத்த மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. ஆனால், மோடி அலை அதிக ஆண்டுகள் நீடிக்கவில்லை. விரைவிலேயே அந்த அலையின் பாதிப்புகளை மக்கள் உணரத் தொடங்க, மாநிலங்களில் பாஜவின் பலம் சரியத் தொடங்கியது. சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் பலம் பெறத் தொடங்கின. ஜனநாயக முறைப்படி காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் மீண்டும் நம்பிக்கை கொண்டனர்.

காங்கிரஸ் கூட்டணி அரசுகளை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், எங்கெல்லாம் நேர்வழியில் ஆட்சியை பிடிக்க முடியவில்லையோ, அங்கெல்லாம் பாஜ தனது சூழ்ச்சி வலையை விரிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. தற்போது, புதுச்சேரியையும் சேர்ந்து 2014 முதல் இதுவரை பாஜ தனது அரசியல் சதுரங்க ஆட்டத்தால் 10 அரசுகளை கவிழ்த்துள்ளது. ஒன்றிரண்டு எம்எல்ஏ.க்கள் மட்டுமின்றி, ஒரு எம்எல்ஏ கூட இல்லாமல் ஆட்சியை கவிழ்ப்பதும், பிடிப்பதும் பாஜ.வின் மகத்தான ‘சாதனை’ ஆக இருந்து வருகிறது. சில மாநிலங்களில் பிராந்திய கட்சிகளின் எம்எல்ஏ.க்களை வளைத்து அக்கட்சியையே உண்டு, இல்லை என்றாக்கி வருகிறது. இதுவரை பாஜ கட்சி கவிழ்த்த அரசுகளின் பட்டியலை இனி பார்ப்போம்...

* ஆண்டு: 2016 அருணாச்சல பிரதேசம்

ஆட்சி கவிழ்ப்பில் பாஜ பிள்ளையார் சுழி போட்ட முதல் மாநிலம் அருணாச்சல பிரதேசம். 2014ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட அருணாச்சலில் 42 இடங்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜ 11 எம்எல்ஏ.க்களை மட்டுமே கொண்டிருந்தது. நபம் துகி முதல்வராக இருந்தார். 2016ம் ஆண்டில் காங்கிரசின் 40 எம்எல்ஏ.க்களுடன் அக்கட்சியில் இருந்து, ‘மக்கள் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கினார் பீமா காண்டு. பி்ன்னர், பாஜ ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார். தொடர்ந்து, பீமா காண்டு முதல்வராகி பாஜ.வுடன் மக்கள் கட்சியை இணைத்து விட்டார். வெறும் 11 எம்எல்ஏ.க்கள் மட்டுமே இருந்த பாஜ.வுக்கு இப்போது 48 எம்எல்ஏக்கள் உள்ளனர். இப்போதும் பீமா காண்டு முதல்வராக நீடிக்கிறார்.

* ஆண்டு: 2017 கோவா

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் 40 தொகுதிகள் கொண்ட கோவாவில் பாஜ 13 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும், காங்கிரசை ஆட்சி அமைக்க விடாமல், பிற கட்சிகளை வளைத்து பாஜ ஆட்சி அமைத்தது. இதன் பின் காங்கிரசில் இருந்து 12 எம்எல்ஏ.க்களையும் பிற கட்சி எம்எல்ஏ.க்களையும் வளைத்து போட்டது. இப்போது இங்கு பாஜவின் பலம் 27 ஆகி விட்டது. நியாயப்படி தனிப்பெரும் கட்சியான காங்கிரசை ஆட்சி அமைக்க விடாமல் பாஜ சூழ்ச்சி செய்து, கடைசியில் அக்கட்சி எம்எல்ஏ.க்களையும் வளைத்துக் கொண்டது ஜனநாயகப் படுகொலை அப்போது  கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

* ஆண்டு: 2017 மணிப்பூர்

மணிப்பூரில் மொத்தம் 60 சட்டப்பேரவை தொதிகளுக்கு கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அதில், 28 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் இருந்தது. ஆனால், கோவாவைப் போலவே, 21 எம்எல்ஏ.க்களை மட்டுமே தன் வசம் வைத்திருந்த பாஜ தலா 4 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற லோக் ஜனசக்தி, சுயேச்சையுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. தற்போது, பாஜவின் பைரன் சிங் இங்கு முதல்வராக உள்ளார்.

* ஆண்டு: 2018 மேகாலயா

மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில், கடந்த 2018ல் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் ஆட்சி அமைக்க தேவையான 31 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 21 இடங்கள் பிடித்து காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தது. தேசிய மக்கள் கட்சி 19 இடங்களும், ஐக்கிய ஜனநாயக கட்சி 6 இடங்களும், மக்கள் ஜனநாயக முன்னணி 4 இடங்களும், மலை மாநில மக்கள் ஜனநாயக முன்னணி 2 இடங்களும், பாஜ 2 இடங்களும், தேசியவாத காங்கிரஸ், கேஎச்என்ஏஎம் கட்சி தலா ஒரு இடத்தையும், 3 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். இதில் வெறும் 2 இடங்களில் வென்ற பாஜ, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளை இணைந்து ஆட்சியை பிடித்தது. இங்கு, தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கன்ராட் சங்மா முதல்வராக இருக்கிறார்.

* ஆண்டு: 2019 கர்நாடகா

கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 104 இடங்களில் வென்றாலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்வராக பொறுப்பேற்ற பாஜ.வின் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான முதல் நாளில் பதவி விலகினார். பின்னர், 80 இடங்களில் வென்ற காங்கிரசும், 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி தலைமையிலான இந்த ஆட்சியை ஓராண்டிலேயே கவிழ்த்தது பாஜ. 16 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை வளைத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, மீண்டும் பாஜவின் எடியூரப்பா முதல்வரானார்.

* ஆண்டு: 2019 சிக்கிம்

சிக்கிமில் 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் பிராந்திய கட்சிகளான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும், கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. அதோடு, முன்னாள் முதல்வர் பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்களில் 10 எம்எல்ஏக்களை வளைத்தது. இதன் பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 இடங்களில் பாஜ 2 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத சிக்கிமில் இப்போது பாஜ 12 எம்எல்ஏ.க்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. பாஜ கூட்டணியில் உள்ள சிக்கிம் கிராந்திகாரி மோர்சா தலலைவர் பிரேம் சிங் சமங் முதல்வராக உள்ளார்.

* ஆண்டு: 2020 மத்திய பிரதேசம்

2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 114 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, 121 எம்எல்ஏ.க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதில் பாஜ 109 இடங்களில் வென்றது. காங்கிரஸ் முதல்வராக கமல்நாத் பதவியேற்றார். ஆனால், பாஜ சரியாக காய் நகர்த்தி 2 ஆண்டில் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தது. காங்கிரஸ் அதிருப்தி எம்பி ஜோதிராதித்ய சிந்தியாவையும், அவருடைய ஆதரவாளர்களான 29 எம்எல்ஏ.க்களையும் பாஜ விலைக்கு வாங்கியது. இதனால், காங்கிரஸ் பெரும்பான்மை இழந்து ஆட்சியை இழந்தது. பின்னர், பாஜ ஆட்சியை பிடித்தது. இங்கு, முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருக்கிறார்.

* ஆண்டு: 2017 பீகார்

பீகாரில் 2015ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வை நுழைய விடக்கூடாது என்பதற்காகவே நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளமும், லாலு தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. லாலு கட்சி 80 இடங்களிலும், நிதிஷ் கட்சி 71 இடங்களிலும் வெற்றி பெற்றது. பாஜ 53 தொகுதிகளில் வென்றது. நிதிஷ் முதல்வராக, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றனர். இத்துடன் மோடியின் அலை முடிந்தது என்றே பேசப்பட்டது. ஆனால், இரண்டே ஆண்டில் லாலு - நிதிஷ் கூட்டணியை பாஜ உடைத்தது. 2017ல் நிதிஷ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த நாளே பாஜ.வுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தார். பாஜ.வின் சுஷில் குமார் துணை முதல்வரானார். லாலுவுக்கு இது பெருத்த அடியாக அமைந்தது.

* ஆண்டு: 2018 ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2015ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) 28 இடங்களிலும், பாஜ 25 இடங்களிலும், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களிலும் வென்றன. பிடிபி.யுடன் இணைந்து பாஜ கூட்டணி ஆட்சி அமைத்தது. 2016ல் முப்தி முகமது சயீத் இறந்த பிறகு அவரது மகள் மெகபூபா முப்தி 2016 ஏப்ரலில் முதல்வர் பதவியேற்றார். அவர் பல விஷயங்களில் உடன்படாததால் 2018ல் கூட்டணியை பாஜ முறித்துக் கொண்டது. அதன் பிறகு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து மாநில நிர்வாகத்தை மத்திய பாஜ அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பாச்சா பலிக்காத மாநிலங்கள்:

* ஆண்டு: 2019 மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 2019 சட்டப்பேரவை தேர்தலில் பாஜ 105 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால், சிவசேனா பாஜ கூட்டணியில் இருந்து விலகியதால், பாஜ.வில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரசில் இருந்து அக்கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவாரை வளைக்க சூழ்ச்சி செய்தது. அஜித் பவார் பல எம்எல்ஏ.க்களுடன் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில், பாஜ முன்னாள் முதல்வர் பட்நவிஸ் முதல்வராக பதவியேற்றார். ஆனால், கடைசி நிமிடத்தில் அஜித் பவார் கவிழ்த்து விட, பட்நவிஸ் ராஜினாமா செய்தார். இறுதியில் சிவசேனா-காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. பாஜ ஏமாற்றம் அடைந்தது.

* ஆண்டு: 2020 ராஜஸ்தான்

ராஜஸ்தானில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 101 தொகுதிகளில் வென்று வெற்றி பெற்றது. பாஜ 72 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால், பல ஆண்டுகளாக இங்கு ஆட்சி செய்த பாஜ.வின் வசுந்தரா ராஜே அரசு வெளியேறியது. அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. இதில், மத்திய பிரதேசத்தை போலவே அதிருப்தியில் இருந்த துணை முதல்வர் சச்சின் பைலட்டை வைத்து பாஜ காய் நகர்த்தியது. இதில் வீழ்ந்த சச்சின் பைலட், 18 எம்எல்ஏ.க்களுடன் தனி கோஷ்டியாக பிரிந்தார். இதனால், கெலாட் அரசு பெரும்பான்மை இழந்தது. ஆனால், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் எடுத்த தீவிர முயற்சியால், சச்சின் பைலட் தனது அதிருப்தியை கைவிட்டு மீண்டும் கட்சிக்கு திரும்பினார். இதனால், அவரை வைத்து விளையாடிய பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி அடைந்தது.

* ஆண்டு: 2021 புதுச்சேரி

புதுச்சேரில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 15 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. 4 வருடம் 9 மாதங்கள் ஆட்சி நடந்த நிலையில், அடுத்த தேர்தலுக்கு இன்னும் 2 மாதமே உள்ள நிலையில், 2 அமைச்சர்கள் உட்பட 6 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை பாஜ வளைத்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்துள்ளது. எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரசுக்கு 7; அதிமுக.வுக்கு 4 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும், தனக்குள்ள 3 நியமன எம்எல்ஏக்களை வைத்தே நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்துள்ளது பாஜ.

* இதென்ன பிரமாதம்... முத்தாய்ப்பாக தமிழகம்...

ஒரு இடம் கூட இல்லாமல், எதிர்க்கட்சிகளை எல்லாம் சூறையாடி பாஜ ஆட்சியை பிடிப்பது பல மாநிலங்களில் நடந்துள்ளன என்றாலும், இது என்ன பிரமாதம்...! இதோ பார் என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்த, பாஜ.வின் அரசியல் சதுரங்க ஆட்டங்கள் அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்திருப்பது தமிழகம்தான். இங்கு நடந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எதிலும் இருந்து ஒரு எம்எல்ஏ.வை கூட வளைத்து போடாமல், ஒட்டு மொத்த அதிமுக.வையே தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, பின்னணியில் இருந்தபடி மறைமுக ஆட்சி நடத்தி வருகிறது பாஜ. ஆளும் அதிமுக.வோ, அதன் பிடியில் ஒரு பொம்மை போல் இருந்து வருகிறது.

Related Stories: