விவசாயிகளை பாதிக்கும் 2019 நில ஆர்ஜித சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு; தேதி கூறாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: ‘தமிழக அரசின் ‘நில ஆர்ஜித சட்டம் - 2019’, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் அதை அமல்படுத்தக் கூடாது,’ என உச்ச நீதிமன்றத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்துவது, அதற்கு நியாயமான இழப்பீடு வழங்குதல், வெளிப்படைத் தன்மையை பின்பற்றுதல், பாதிக்கப்படும் மக்களுக்கு மறுவாழ்வும், மறுகுடியமர்வும் அளித்தல் ஆகியவற்றுக்காக மத்திய அரசு கடந்த 2013ம் ஆண்டு புதிய சட்டம் கொண்டு வந்தது.

இந்த சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில், 2015ம் ஆண்டு தமிழக அரசு 105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு வழங்குதல், வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது. இருப்பினும், தமிழகத்தில் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடத்த அனுமதி அளித்து, கடந்த 2019, செப்டம்பர் 27ம் தேதி உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இதே 2015 சட்டத்தில் சிறிய திருத்தங்களை செய்த தமிழக அரசு, ‘நில ஆர்ஜித சட்டம் -2019’ என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள், உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்களின் நிலங்களை கையகப்படுத்தவோ, அதில் அரசு அதிகாரிகள் நுழையவோ கூடாது என கடந்த மாதம் 18ம் தேதி இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் மற்றும் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா செய்த வாதத்தில், ‘‘நில ஆர்ஜித சட்டம் - 2019’ என்பது, அரசின் கொள்கை சார்ந்த ஒன்றாகும். இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அது சார்ந்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்,’’ என்றார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர்கள் வில்சன், குமணன் செய்த வாதத்தில், ‘‘இச்சட்டம் முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது.

அதனால், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, நில ஆர்ஜித சட்டம் - 2019. புதியதாக உருவாக்கப்பட்டது அல்ல. முந்தைய சட்டப் பிரிவுகளில் சிறிய திருத்தங்களை மட்டுமே செய்து, பழைய சட்டத்தையே அமல்படுத்த முயற்சிக்கப்படுகிறது. அதனால், ‘நில ஆர்ஜித சட்டம் - 2019’ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,’’ என்றனர். வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது குறித்து அனைத்து தரப்பினரும் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: