மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய செயல் இயக்குனர் நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செயல் இயக்குனராக மருத்துவர் மங்கு ஹனுமந்த ராவை மத்திய அரசு நியமித்துள்ளது. டெல்லியில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை போன்று, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக் குழுவும் பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.

இதையடுத்து, இறுதியாக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 201.75 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,000 கோடியில் உலக தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனையின்  தலைவராக வி.எம்.கடோசை நியமித்து கடந்தாண்டு அக்டோபர் 28ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதில், குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 4 மருத்துவர்கள் கொண்ட குழுவில் சண்முகம் சுப்பையா நியமிக்கப்பட்டதால் அப்போது கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில், நான்கு மாநிலங்களில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு புதிய செயல் இயக்குனர்களை நியமித்து, மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘ஜம்மு காஷ்மீர் விஜயப்பூருக்கு டாக்டர் சங்கி குமார் குப்தா, குஜராத்திற்கு சந்தன் தேவ் சிங் கோட்டோச், இமாச்சலப் பிரதேசத்திற்கு விர் சிங் நெகாய், மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துமனைக்கு டாக்டர் மங்கு ஹனுமந்த ராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமந்த் ராவ் தற்போது திருப்பதியில் உள்ள எஸ்.வி.மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.

Related Stories: