பேரிடர் அழிவுகளை தாங்கக் கூடிய உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்: ஐஐடி மாணவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

கரக்பூர்: ‘பேரிடர் காலங்களில் ஏற்படும் அழிவுகளை தாங்கும் வகையிலான உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை ஐஐடி மாணவர்கள் உருவாக்க வேண்டும்,’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், கரக்பூர் ஐஐடி.யில் 66வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி காணொலி மூலாமாக பேசியதாவது: பருவநிலை மாற்றம் என்பது உலகத்தின் முன் இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். பேரழிவு மேலாண்மையில், உலக நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது. சமீபத்தில், உத்தரகாண்டில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்த்தீர்கள். பேரிடர் காலங்களில் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையிலான உள்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நாம் கவனத்தை செலுத்த வேண்டும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் தொழில்நுட்பங்கள் உருவாக்கியதில் ஐஐடி.கள் முக்கிய பங்கு வகுத்தன. ஐஐடி.க்கள் தற்போது எதிர்கால சுகாதார பிரச்னைகளுக்கான  தீர்வுகளை காண்பதற்காகவும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும். 130 கோடி மக்களின் ஆவலை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். மக்கள் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் புதிய நிறுவனங்களாக நீங்கள் மாற வேண்டும். ஐஐடி.க்கள் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களாக மாற வேண்டியது அவசியமாகும். சுய விழிப்புணர்வு, சுய நம்பிக்கை, தன்னலமற்ற தன்மை ஆகிய 3 சுயத்தை அடிப்படையாக கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க 4 முனை முயற்சி

இதேபோல், பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்துவது குறித்த இணைய வழி கருத்தரங்கில் பங்கேற்று மோடி பேசுகையில், “தற்போது சுகாதார துறைக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியின் அளவு வியக்கத்தக்கது. நாட்டை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக அரசு ஒரே நேரத்தில் நான்கு முனைகளில் செயல்பட்டு வருகிறது. நோய் தடுப்பு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், அனைவருக்கும் சுகாதார அணுகல், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் நிபுணர்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தல், சிக்கல்களில் இருந்து வெளியே வருவதற்காக பணியாற்றுவது என அரசு செயலாற்றி வருகிறது. எதிர்காலத்தில் இந்திய மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கான தேவை, உலகளவில் அதிகரிக்கும்,” என்றார்.

Related Stories: