பாஸ்டேக்கில் இப்படியும் குளறுபடி வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு கழிந்தது ரூ.310: புனேயில் ஐடி ஊழியர் அதிர்ச்சி

புனே: வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு பாஸ்டேக்கில் பணம் கழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேயை சேர்ந்தவர் வினோத் ஜோஷி. ஐடி ஊழியரான இவர், சேனாபதி சாலையில் உள்ள பள்ளிக்கு தனது மகளை காரில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெளியில் செல்லாததால், காரை வீட்டிலேயே நிறுத்தியிருந்தார். அப்போது அவரது மொபைல் போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில், வாசி சுங்கச்சாவடியில் அவரது பாஸ்டேக் வாலட்டில் இருந்து ரூ.40 கழிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது. சிறிது நேரம் கழித்து,காலாப்பூர் சுங்கச்சாவடியில் அவரது வாலட்டில் இருந்து ரூ.203 கழிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்தது.

பின்னர்,  தாலேகான் சுங்கச்சாவடியில் ரூ.67 கழிக்கப்பட்டதாகவும் தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோஷி, தனது பாஸ்டேக் இணைக்கப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டார். ஆனால், அந்த பணத்தை திரும்பப் பெறவதற்கான உதவி எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து, பாஸ்டேக் வழங்கிய வங்கிக்கு நேரில் சென்று புகார் கொடுத்து விட்டு தீர்வுக்காக காத்திருக்கிறார். வீட்டில் நாள் முழுவதும் நிறுத்தியிருந்த காருக்கு பாஸ்டேக்கில் கட்டணம் கழிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: