‘ரைஸ் புல்லிங்’ மோசடி விவகாரம் சினிமா போட்டோகிராபர் நண்பருடன் பிடிபட்டார்: சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பால் காவலில் எடுக்க போலீஸ் முடிவு

சென்னை: சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியை சேர்ந்தவர் நியூட்டன் (44). சினிமா போட்டோகிராபரான இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். இவர், தனது நண்பரான ரகுஜி என்பவருடன் சேர்ந்து தங்களிடம் 400 முதல் 500 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் இருப்பதாகவும், அதாவது இரிடியம் கலந்த பழங்கால கலசத்தை இவர்கள் ‘ரைஸ் புல்லிங்’ என்று செல்லமாக அழைப்பார்கள். இந்த கலசத்தை வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்தால் பணம் கொட்டும் என்று கூறி சினிமா பைனான்சியர் முதல் தொழிலதிபர்கள் வரை பலரிடம் ஏமாற்றி ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், இடைத்தரகர்களாக செயல்பட்ட சதீஷ்குமார் (38), சுனில்குமார் (32), திலீப் (30), விக்கி (எ) விக்னேஷ் (22), கவுதம் (28), சீனிவாசன் (33) ஆகிய 6 பேரிடமும் ரூ.30 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரும் நியூட்டன் மற்றும் அவரது நண்பர் ரகுஜி 19ம் தேதி கடத்தினர். இதுகுறித்து நியூட்டன் மனைவி கவுசல்யா விரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் செல்போன் சிக்னல் உதவியுடன் சினிமா போட்டோகிராபர் மற்றும் அவரது நண்பர் ரகுஜி ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரும் தனித்தனியாக நியூட்டன் மற்றும் ரகுஜி ஆகியோர் மீது புகார் அளித்தனர்.

அதில், தங்களிடம் பழங்கால இரிடியம் கலந்த ‘ரைஸ் புல்லிங்’ இருப்பதாக கூறி எங்கள் மூலம் பல தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பைனான்சியர்களிடம் முன் பணமாக ரூ.30 லட்சம் பெற்று இருவரும் ஏமாற்றி விட்டதாகவும், எங்கள் வார்த்தையை நம்பி பணம் கொடுத்த தொழிலதிபர்கள் கொடுத்த நெருக்கடியால் நாங்கள் இருவரையும் கடத்தி கொடுத்த பணத்தை திரும்ப பெற முயற்சி செய்தோம். எனவே எங்களிடம் ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த நியூட்டன் மற்றும் ரகுஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்படி போலீசார் மோசடியில் ஈடுபட்ட நியூட்டன் மற்றும் ரகுஜி மீது மோசடி, கூட்டு சதி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் கடந்த 5 ஆண்டுகளாக நியூட்டன் மற்றும் ரகுஜி ஈடுபட்டு வந்ததாகவும், இவர்கள் சிலை கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி கொண்டு பழங்கால கோயில் கலசங்களில் இரிடியம் இருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் இருவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதால் இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: