முதல்வர் பாதுகாப்பு பணியின்போது காரில் வைத்து பெண் ஐபிஎஸ்சிடம் தவறாக நடந்த போலீஸ் உயர் அதிகாரி: உள்துறை செயலாளர், டிஜிபியிடம் புகாரால் பரபரப்பு

சென்னை: முதல்வர் பாதுகாப்பு பணியின்போது பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் தவறாக நடக்க முயன்ற ஐபிஎஸ் அதிகாரி மீது தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தமிழக காவல்துறையில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சில மாதங்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய பெண் எஸ்பியிடம், அந்த துறையின் உயர் அதிகாரி ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து அந்த பெண் அதிகாரி புகார் செய்தார். இது பற்றி விசாரணை நடத்த தனி குழு நியமிக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவின் விசாரணை அப்படியே முடக்கப்பட்டு விட்டது.  இந்த நிலையில், ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியிடமே, உயர் பதவியில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கினார். அவரது பாதுகாப்புக்கு சென்னையில் இருந்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார். விழா முடிந்து முதல்வர் சேலம் சென்றதும், பாதுகாப்புக்கு சென்ற உயர் அதிகாரி சென்னைக்கு காரில் புறப்பட்டார்.

அதிகாரி சென்னைக்கு புறப்பட்டதால் பல மாவட்ட அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பினர். அதில் ஒரு மாவட்டத்தில் உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனது மாவட்ட எல்லையில் சென்னை அதிகாரியை வரவேற்றார். பெண் அதிகாரியைப் பார்த்ததும் உங்களிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும். காரில் ஏறுங்கள் என்று சொன்னார் சென்னை அதிகாரி. பெண் அதிகாரி காரில் ஏறியதும், நைசாக பேச்சுக் கொடுத்தவர், திடீரென பெண் அதிகாரியின் மீது கையை வைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பெண் அதிகாரி பதற்றமடைந்தார். அவர் நேர்மையான, துணிச்சலான பெண் அதிகாரி என்பதால், ‘இந்த வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம்’ என்று எச்சரித்துள்ளார். அந்த எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், சென்னை அதிகாரியை எச்சரித்ததோடு, காரில் இருந்து வேகமாக இறங்கி, தனது காரில் ஏறி சென்று விட்டார்.  அதன்பின்னர் நடந்த சம்பவம் குறித்தும், தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்தும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகார் தமிழக போலீஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உயர் அதிகாரி ஏற்கனவே மாவட்ட எஸ்பியாக பணியாற்றியபோது பெண் கூடுதல் எஸ்பியிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரைத் தொடர்ந்து சென்னை அதிகாரியை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா சஸ்பெண்ட் செய்தார். 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பறகுதான் மீண்டும் பணிக்கு வந்தார். அவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் ஏதாவது ஒரு பாலியல் புகாரில் சிக்கியபடியேதான் இருப்பார். தற்போது தமிழக போலீசில் உயர் பதவி கிடைத்ததும் மனிதர் திருந்தியிருப்பார் என்று அதிகாரிகள் நினைத்தனர். ஆனால் அதை பொய் என்று நிரூபித்து விட்டதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த பாலியல் புகார் குறித்து உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வரிடம் டிஜிபி திரிபாதி ஆலோசனை நடத்தியுள்ளார். பின்னர் உள்துறைச் செயலாளருக்கு, புகார் மீது நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்துள்ளார்.

ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் எழுந்த பாலியல் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததுபோல, இந்தப் புகார் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவார்களா என்ற அச்சம் பெண் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெனில் உயர் அதிகாரி, முதல்வர் விழா மற்றும் பிரசாரத்துக்காக இனி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செல்வார். அவரை எப்படி சமாளிப்பது என்பதே பெண் அதிகாரிகளுக்கு சவாலான பணியாகிவிடும் என்றும் பீதியடைந்துள்ளனர்.

Related Stories: