டெல்லியில் தொற்று குறைந்து வருவதால் 2 கொரோனா சிறப்பு மையங்களை மூட உத்தரவு: உள்துறை அமைச்சகம் அதிரடி

புதுடெல்லி; டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருவதால் 2 சிறப்பு மையங்களை மூட மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் கொரோனா தொற்று கடந்த மார்ச் மாதம் பரவ ஆரம்பித்த போது மற்ற மாநிலங்களை விட வேகமாக பரவியது. ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக களம் இறங்கி ஆலோசனை நடத்தினார்.

முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் மாநில அரசு அதிகாரிகளுடன் அவர் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் கொரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 2 சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டெல்லி கன்டோன்ட்மென்ட் பகுதியில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பு சார்பில் சிறப்பு வசதி கொண்ட கொரோனா மையம் அமைக்கப்பட்டது. மேலும் தெற்குடெல்லி சாத்தார்புரா பகுதியில் சர்தார் பட்டேல் கோவிட் மையம் அமைக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதத்தில் இந்த மையங்கள் செயல்பட ஆரம்பித்தன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ சேவை மையம் சார்பில் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சாத்தார்புரா மையம் உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக அமைக்கப்பட்டது. அங்கு 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்கப்பட்டு சிறப்பு மருத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. தற்போது அங்கு 60 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஐசியூவில் யாரும் இல்லை. இங்கு இதுவரை 12 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர். வெளிநாட்டில் இருந்த வந்த நோயாளிகள்கூட இங்கு போதுமான மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு யாரும் கொரோனாவால் பலியாகவில்லை. ஆனால் உயர் மருத்துவ சிகிச்சைக்காக 300 நோயாளிகள் மற்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது டெல்லியில் கொரோனா எண்ணிக்கை சரிந்துவருகிறது. இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்படுத்திய இந்த இரண்டு சிறப்பு மையங்களிலும் புதிதாக யாரும் சிகிச்சைக்கு வருவதில்லை. எனவே இந்த மையங்களை மூட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: