கொரோனா தடுப்பூசி போட்ட சுகாதார ஊழியர் திடீர் சாவு: மகன் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி; டெல்லியில் கொரோனா தடுப்புசி போட்ட சுகாதார ஊழியர் திடீரென பலியானார். அவரது மகன் இதுபற்றி புகார் அளித்துள்ளார். வடக்கு டெல்லி மாநகராட்சியில் சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தவர் ரமேஷ்குமார்(54). அங்குள்ள கேசவ்புரம் மண்டலத்தில் அதிகாரியாக அவர் இருந்தார். பிப்ரவரி 17ம் தேதி அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். திங்கட்கிழமை காலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரது மகன் தீரஜ் அருகில் உள்ள திப்சந்த் பாந்து மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் பலியானார். அவரது இறப்பிற்கான காரணம் குறித்து அறிய பிரேதபரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் எனது தந்தை இறந்தார் என்று ரமேஷ்குமார் மகன் தீரஜ் குற்றம்சாட்டினார். நேற்று அவர் கூறியதாவது:

கடந்த பிப்ரவரி 17ம் தேதி எனது தந்தை கோவிஷூல்டு முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதன்பின் அவர் வீட்டுக்குவந்த போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மறுநாள் அவருக்கு காய்ச்சல் வந்தது. இந்த காய்ச்சல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடித்தது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட போதும் அவர் தினமும் பணிக்கு சென்று வந்தார். நேற்றுமுன்தினம் அதே போல் பணிக்கு சென்ற போது மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவமனையில் சேர்த்த போது உடல்நலக்குறைவால் பலியானதாக அவர்கள் தெரிவித்தனர். இதை அறிந்ததும் எங்கள் வீட்டுக்கு சில கட்சி தலைவர்கள் வந்தனர். அவரது மரணத்திற்கு இழப்பீடு தருவதாகவும், வாரிசு ஒருவருக்கு வேலை தருவதாகவும் கூறினர். எங்கள் குடும்பத்தில் எனது மூத்த சகோதரி, எனது இளைய சகோதரன், நான் ஆகியோர் உள்ளோம். எங்கள் குடும்பம் வருமானத்திற்கு எனது தந்தையை தான் நம்பியிருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: