கர்நாடகத்தில் தனியார் பள்ளி கட்டணம் 30% குறைப்பு அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் நிர்வாகிகள் போராட்டம்: பெங்களூரு நகரில் நடத்திய பேரணியால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகத்தில் தனியார் பள்ளி கட்டணத்தை 30% குறைத்திருப்பதை அரசு திரும்ப பெறவேண்டுமென்று கோரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பெங்களூரு மாநகரில் மாபெரும் பேரணி நடத்தினர். கர்நாடகத்தில் கொரோனா காலக்கட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கள் நடந்து வந்தது. ஆனால் வழக்கம்போல முழு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த பெற்றோர், கல்விக்கட்டணத்தை குறைக்கவேண்டுமென்று பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று கொண்ட மாநில கல்வித்துறை அமைச்சகம், தனியார் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்தது மட்டுமின்றி, 30 சதவீதம் கட்டணத்தை குறைத்துள்ளது.

அரசின் இந்த உத்தரவால் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், பள்ளிகளை நிர்வகிக்க முடியாமலும் திணறுவதாக தெரிவித்தனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இனியும் இதே நடைமுறை அமலில் இருந்தால், பள்ளிகளை இழுத்து மூடவேண்டிய நிலைதான் ஏற்படும் என்று ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கொந்தளித்தனர்.  வழக்கமான கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு மாநில அரசு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் மாநில அரசு மற்றும் பள்ளி கல்வித்துறையின் செயல்பாட்டை கண்டித்து, நேற்று கர்நாடகத்தின் வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர், மாபெரும் ஊர்வலம் மற்றும் பேராட்டம் நடத்தினர்.

பெங்களூரு நகரம் மற்றும் ஊரகம், கோலார், மைசூர், மண்டியா, துமகூரு, சிக்கமகளூரு, ஷிவமொக்கா, பெலகாவி, ராய்ச்சூர், கலபுர்கி உள்பட வெவ்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் நகருக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மெஜஸ்டிக் பஸ் நிலையம் மற்றும் சிட்டி ரயில்வே நிலையத்தில் தொடங்கிய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஊர்வலமாக சுதந்திர பூங்காவிற்கு சென்று, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கட்டணத்தில் 30 சதவீதம் குறைந்திருப்பதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பிய அவர்கள், அந்த உத்தரவை மாநில கல்வித்துறை திரும்ப பெறவேண்டுமென்று கண்டன குரல் எழுப்பினர். இதனால் பெங்களூரு நகரமே ஸ்தம்பித்தது.

போக்குவரத்து மாற்றம்

மெஜஸ்டிக்கில் இருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்து மாற்று பாதைகளில் இயக்கப்பட்டது. அதே போன்று பல்வேறு பகுதியில் இருந்து மெஜஸ்டிக்கு வந்த வாகனங்களும் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டதால் பெங்களூருவின் மையப்பகுதியில் நேற்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: