சிக்கபள்ளாபுராவில் பாஜ பிரமுகரின் கல்குவாரியில் ஜெலட்டின் குச்சி வெடித்து 6 பேர் பலி

* ஷிவமொக்காவை தொடர்ந்து மேலும் ஒரு விபத்து   

* உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ₹5 லட்சம் நிவாரணம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஷிவமொக்காவை தொடர்ந்து சிக்கப்பள்ளாபுராவில் பாஜ பிரமுகருக்கு சொந்தமான கல்குவாரிக்கு பயன்படுத்துவதற்கு எடுத்து செல்லப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயத்துடன் அருகேயுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதமர் மோடி, முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பல தலைவர்கள் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.  சிக்கப்பள்ளாபுரா மாவட்டம் குடிபண்டே தாலுகா ஹிரேநாகவள்ளி கிராமத்தில் சாய் ஏஜென்சிஸ் என்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த கல்குவாரியில் வெடி வைப்பதற்காக, குடிபண்டேவில் இருந்து டாடா ஏஸ் வாகனம் மூலம் ஜெலட்டின் குச்சிகளை சிலர் ஏற்றி கொண்டு சென்றனர். இந்த வாகனத்தை இரண்டு பேர் பைக்கில் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.

கல்குவாரி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சி வெடித்து சிதறியது. இந்த வெடிச்சத்தம் 150 கி.மீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது. குண்டு வெடிப்பு விபத்து நிகழ்ந்தது போன்று அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது, வாகனத்துடன் அதில் இருந்தவர்களும் தீயில் கருகி கொண்டிருந்தனர். மேலும் பைக்கில் பின்தொடர்ந்து சென்ற 2 பேரும் ஜெலட்டின் குச்சியில் இருந்து வெளியான துகள்கள் பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காயமடைந்த லாரி டிரைவர் உள்பட 3 பேரை அருகேயுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து ஹூடிபண்டே போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயும் ஒருவர், மருத்துவ மனையிலும் உயிரிழந்திருந்திருப்பதாக தெரியவந்தது.

 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுதாகர், உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் ஏ.டி.ஜி.பி பிரதாப் ரெட்டி, மத்திய மண்டல ஐ.ஜி சந்திரசேகர், எஸ்.பி மிதுன் குமார், மாவட்ட கலெக்டர் லதா ஆகியோர் சென்று பார்வையிட்டனர். அதிகாரிகள் விசாரணையில் கல்குவாரி பாஜவை சேர்ந்த முக்கிய பிரமுகரான நாகராஜ் என்ற தொழிலதிபருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. சட்டவிரோதமாகத்தான் கல்குவாரியை அவர் நடத்தி வந்திருப்பதாகவும் ஏராளமான புகார்கள் வந்துள்ளது. இதற்கு முன்னதாக ஷிவமொக்காவில் கடந்த ஜன.22ம் தேதி இதேபோன்று கல்குவாரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை

தொடர்ந்து மாநிலம் முழுவதும் கல்குவாரிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டது.

சிலர் மட்டும் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கி வைத்து, போலீசாருக்கு தெரியாமல் கல்குவாரிக்கு வெடி வைத்து வந்தனர். அதில் இந்த கல்குவாரியும் ஒன்று.  நள்ளிரவு நேரம் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கவைக்க முயற்சித்திருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கு காரணமான கல்குவாரியின் உரிமையாளர் நாகராஜ் மற்றும் பங்குதாரரான ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ராகவேந்திரா ரெட்டி, சிவாரெட்டி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஹூடிபண்டே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அமைச்சர்கள் பசவராஜ் பொம்மை மற்றும் முருகேஷ் நிராணி ஆகியோர் கூறும்போது;  ஹிரேநாவள்ளி பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் நாகராஜ், சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சியை வரவழைத்துள்ளார். அவரின் அலட்சியமே தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோதமாக ஜெலட்டின் குச்சியை பயன்படுத்தியதாக உரிமையாளர் மற்றும் பங்குதாரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

 சம்பவத்தை தொடர்ந்து உரிமையாளர் மற்றும் கல்குவாரியுடன் தொடர்பில் உள்ளவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அதே நேரம் இந்த விபத்து குறித்து சி.ஐ.டி விசாரணை நடத்தப்படும். சி.ஐ.டி அறிக்கை வந்ததும் சட்டப்படி நடவடிக்கை பாயும். வரும் நாட்களில் இதுபோன்று விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த கல்குவாரிக்கு உரிமை அளித்ததாக நில அளவியல் துறையை சேர்ந்த இருவேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் உதவி தொகையாக விரைவில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அரசு அலட்சியத்தால் விபத்து

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் கூறும்போது; கடந்த ஒரு மாதங்களில் இருவேறு கல்குவாரிகளில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து சிதறியுள்ளது. இதில் அப்பாவி தொழிலாளிகள் பலர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட இருவேறு கல்குவாரிகளும் சட்டவிரோதமாக நடத்தப்பட்டது தான். ஜெலட்டின் குச்சிகளை தடை செய்தும், அதை பதுக்கி வைத்திருந்தபோது, விபத்து நடந்துள்ளது. இது தெரிந்து மாநில அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. நடவடிக்கை எடுக்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகளும் ஜோக்கர்கள் போன்று செயல்படுகின்றனர். மக்கள் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, ஆட்சியை காப்பாற்றுவதிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். மீடியாக்கள் முன்பு சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு, எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுப்பது இல்லை. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவிகள் வழங்கவேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர், முதல்வர் இரங்கல்

சிக்கப்பள்ளாபுரா விபத்து குறித்து தகவல் கிடைத்தது, பிரதமர் நரேந்திரமோடி டிவிட்டரில் 6 பேரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், அன்னாரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதேபோன்று மாநில முதல்வர் எடியூரப்பா பதிவிட்டுள்ள டிவிட்டில் ஹிரேநாகவள்ளி ஜெலட்டின் குச்சி வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அதே நேரம் இந்த விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றார்.

உயிரிழந்தவர்களின் விவரம்

வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து போலீசார் விசாரித்தபோது, அவர்கள் திரிபுராவாசினியை சேர்ந்த கல்குவாரி இன்ஜினியர் உமாகாந்த், காவலாளி மகேஷ், தொழிலாளி முரளி, அந்த கிராமத்தை சேர்ந்த ராமு, அபி மற்றும்  கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் கங்காதர் என தெரியவந்தது.

Related Stories: