மக்கள் கேட்டதால் தாசில்தார் நடனமாடினார்

* சமூக வலைதளங்களில் தவறான விமர்சனம்

* கிராமத்தினர் மறுப்பு

பங்காருபேட்டை; மக்கள்  தரிசனம் நிகழ்ச்சியில் கிராம மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற  நோக்கத்தில் தாசில்தார் நடனமாடினாரே தவிர, வேறு எந்த நோக்கமுமில்லை என்று  கிராம மக்கள் தெரிவித்தனர்.  மாவட்டத்தின் பங்காருபேட்டை தாலுகா,  நரிநத்தம் கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்  அதிகாரிகள் நடை கிராமங்களை நோக்கி என்ற திட்டத்தில் தாசில்தார்  எம்.தயானந்தா கிராமத்திற்கு சென்று மக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது  மக்களுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தபோது, பாடலுக்கு நடமாடினார். இது  சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. தாசில்தார் கடமை செய்யாமல் ஆட்டம்,  பாட்டம் கொண்டாட்டத்தில் இருப்பதாக விமர்சனம் செய்தனர். நடனமாடியது  தொடர்பாக விளக்கம் கேட்டு தாசில்தாருக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில்  தாசில்தார் மீதான குற்றச்சாட்டுக்கு நரிநத்தம் கிராமத்தினர் கடும்  அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். எங்கள் கிராமத்தில் தங்கிய தாசில்தார்,  நாங்கள் கொடுத்த 240 விண்ணப்பங்களை உடனடியாக தீர்வு கண்டார். கிராமத்திற்கு  தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து வருகிறார். கிராம தரிசனம்  செய்தபோது மட்டுமில்லாமல், எப்போது எந்த தேவைக்கு சென்றாலும் உடனடியாக  செய்து கொடுத்து வருகிறார். எம்.தயானந்தா போன்ற நல்ல தாசில்தாரை  இதுவரை பார்க்கவில்லை. எங்கள் கிராமத்தில் தங்கி மக்கள் குறை கேட்டபோது,  சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாக பழகினார். நாங்கள்  கேட்டு கொண்டதால், நடனமாடினாரே தவிர, வேறு எந்த  உள்நோக்கமும் கிடையாது. அவருக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இதுபோன்று  வீடியோ வைரலாக விட்டுள்ளதாக முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் முனிர்  தலைமையில் கிராமத்தினர் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: