வளர்ச்சி பணிகளின் குறித்த புகார் விசாரணை நடத்த குழு அமைக்கப்படும்: அமைச்சர் எம்டிபி நாகராஜ் தகவல்

கோலார்: கோலார் நகரசபை சார்பில் மேற்கொண்டுவரும் வளர்ச்சி திட்டங்களில் தரம் குறைந்துள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எம்டிபி நாகராஜ் தெரிவித்தார்.

 கோலார் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்த அமைச்சர் நாகராஜ், நேற்று கோலார் நகரசபை மூலம் மேற்கொண்டுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது நகரசபை ஆணையரிடம்  விவரங்களை கேட்டு பெற்று பரிசீலனை செய்தார். அதை தொடர்ந்து அமைச்சர் பேசும்போது, ``நகர பகுதிகளில் வாழும் மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதி குறைபாடுகள் இல்லாமல் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நகர பகுதியில் உள்ள ஒவ்வொரு குடியிருப்புக்கும் சுத்தமான தண்ணீர் வழங்க வேண்டும். கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும். சாலைகள் குண்டு, குழி இல்லாமல் சீராக இருக்க வேண்டும். தெருவிளக்குகள் சரியாக எரிய வேண்டும். நகர பகுதிகளில் சேமிக்கப்படும் திட மற்றும் பசுமை கழிவுகளை அகற்றும் பணியை துரிதமாக செயல்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்த வசதியாக சாலையோரங்கள் மற்றும் காலியாக இருக்கும் அரசு புறம்போக்கு நிலங்களில் செடிகள் வளர்ப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும். நகரசபை இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நகரசபை சார்பில் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகள் தரம் குறைந்துள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய மூத்த அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கை கொடுத்ததும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தரம் குறைவாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் குத்தகைதாரர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவர்’’ என்று எச்சரித்தார்.

Related Stories: