நடிகர் தர்ஷன் ஆதரவாளர்கள் மிரட்டல் என்னை அவமதிப்பது கன்னட திரையுலகை அவமதிப்பதற்கு சமம்: நடிகர் ஜக்கேஷ் ஆதங்கம்

பெங்களூரு: என்னை அவமதிப்பது 40 ஆண்டு கால கன்னட திரையுலகை அவமதிப்பதற்கு சமம் என்று கன்னட நடிகர் ஜக்கேஷ் ஆதங்கமடைந்துள்ளார்.  கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர்களில் ஒருவர் ஜக்கேஷ். நவரச நடிகரான ஜக்கேஷ் சமீபத்தில் கன்னட திரையுலக தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசும்போது, ஆபாசமாக சில வார்த்தைகளை கூறியதாக தெரிகிறது. இதை ஆடியோவாக பதிவு செய்து கொண்ட அந்த தயாரிப்பாளர் உடனே அதை நடிகர் தர்ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதை கேள்விப்பட்ட தர்ஷன் ஆதரவாளர்கள் ஜக்கேஷ் இருந்த மைசூர் படம் சூட்டிற்கு சென்று, அவரை மிரட்டி மன்னிப்பு கேட்கும்படி செய்தனர்.

 இதில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ஜக்கேஷ், அந்த ஆடியோ என்னுடையது இல்லை.  என்னை அவமதிக்கவேண்டுமென்ற நோக்கில், யாரோ திட்டமிட்டு இந்த சதி செயலில் ஈடுபட்டதாக கூறியிருந்தார். இருப்பினும் தர்ஷன் ஆதரவாளர்கள் விடவில்லை. தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு, மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மிகவும் மனம் நொந்த ஜக்கேஷ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் 14 நிமிடம் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கன்னட திரையுலகில் 40 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ், சங்கர்நாக் ஆகியோருடன் நடித்துள்ளேன். நான் நடிக்கும்போது, இப்பொழுது என்னை மிரட்டும் நடிகர்கள் கன்னட திரையுலகிலேயே இல்லை. திடீரென்று முளைத்துள்ள அவர்கள், தற்போது குண்டர்களை கொண்டு, என்னை மிரட்டுகின்றனர். இதற்கு நான் அஞ்சி ஓடிவிடமாட்டேன்.  என்னிடமும் ரசிகர்கள் உள்ளனர். 162 சங்கங்கள் இயக்கி வருகிறது. பலர் இந்த தகவல் அறிந்து, கொதித்தெழுந்துபோய் உள்ளனர்.

தனிமையில் பேசியதை பெரிதுப்படுத்தி, என்னை அவமதிக்க நினைப்பவர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் ஆகியோரை போன்று இறந்த பின்னர் திதி வைத்து கொண்டாடுங்கள். நான் சந்தோஷப்படுவேன். கன்னடர் என்பதை தாண்டி கன்னட நாட்டின் மீது அதிக பற்று கொண்ட தான் இன்றுவரை எந்த வேற்று மொழி சினிமாவிலும் நடிக்கவில்லை. ஆனால் வேற்று மொழியில் நடிப்பவர்களின் பேச்சை கேட்டு என்னை அவமதிக்கின்றனர்.இது ஒட்டுமொத்த கன்னட சினிமாவையே அவமதிக்கும் செயலாகும். நான் நினைத்தால் 20 முறை எம்.எல்.ஏவாகியிருக்க முடியும். 20 முறை எம்.பியாகியிருக்கமுடியும். ஆனால் அதை நான் விரும்பவில்லை.

யாருக்கும் சலாம் போட்டு, அல்லது பக்கெட்டு தூக்கிதான் வாழ்க்கை நடத்தவேண்டுமென்று அவசியம் இல்லை. இப்பொழுது இருப்பவர்களுக்கு வேண்டுமென்றால் அது தேவைப்படும். நான் ஒருவனே முன்னேறவேண்டுமென்று நினைத்து செயல்படுவர்களால், கன்னட திரைத்துறையே சீரழிந்து வருகிறது. கன்னட திரையுலகை கலைத்திரையாக வைக்காமல் குண்டர்களின் புகலிடமாக வைத்திருப்பது, மிகவும் மன வருத்தம் அடைய செய்திருப்பதாக நடிகர் ஜக்கேஷ் தெரிவித்துள்ளார்.

தனிமையில் பேசியதை பெரிதுப்படுத்தி, என்னை அவமதிக்க நினைப்பவர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்தன், அம்பரீஷ் ஆகியோரை போன்று இறந்த பின்னர் திதி வைத்து கொண்டாடுங்கள். நான் சந்தோஷப்படுவேன்.

Related Stories: