60% தடுப்பூசிகளை உற்பத்தி செய்து உலகின் மருந்தகமாக மாறிய இந்தியா: அமெரிக்க வெளியுறவு அதிகாரி பாராட்டு

வாஷிங்டன்: உலகளவில் 60 சதவீத தடுப்பூசிகளில் உற்பத்தி செய்து உலகின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 28,184,218 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 5,00,172 பேர் இறந்துள்ளனர். இதுகுறித்து, வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘அமெரிக்கா - இந்தியா இடையிலான  சுகாதார ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். கொரோனா நோயைக் கண்டறிவதற்கான நோயறிதல்கள், சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் உருவாக்கல், அங்கீகரித்தல் ஆகியவற்றில் ஒன்றிணைந்து  செயல்படுகிறோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1,10,05,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,56,385 ஆக, உலகளவில் நான்காவது  இடத்தில் இந்தியா உள்ளது. உலகின் பல நாடுகளுக்கு தங்களது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இந்தியா சப்ளை செய்துள்ளது. ‘உலகின் மருந்தகம்’ என்று அழைக்கப்படும் இந்தியா, உலகளவில் 60 சதவீத தடுப்பூசிகளை உற்பத்தி  செய்கிறது.

நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், சீஷெல்ஸ், மியான்மர், மொரீஷியஸ், ஓமான், சவுதி அரேபியா, பஹ்ரைன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை இந்தியா அனுப்பியுள்ளது.  தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச சிறப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த விரும்புகின்றன’ என்றார். 

Related Stories: