உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள் பாஜகவை திணறடிக்கும் ‘மோடி ரோஜ்கர் டூ’: ஹேஷ்டாக்கில் 6.74 லட்சம் பேர் கருத்து

புதுடெல்லி: உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள் என்ற கோஷங்களுடன் டுவிட்டரில் ‘மோடி ரோஜ்கர் டூ’ என்ற ஹேஷ்டாக்கில் 6.74 லட்சம் பேர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ராகுல்காந்தியும் இந்த ஹேஷ்டேக்கில் தனது கருத்தை பதிவு  செய்துள்ளதால், இந்த ஹேஷ்டேக் ஆளும் பாஜகவை திணறடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலையை  இழந்தனர்.

 சி.எம்.ஐ.இ.இ அறிக்கையின்படி,  ‘கடந்தாண்டு மார்ச் மாதத்தில்  அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பிறகு, மாத சம்பள  வருவாய் பெற்ற  1.77 பேர் வேலை  இழந்தனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மேலும் பலர் வேலை  இழந்தனர். தற்ேபாது ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை  என்றாலும் கூட பொருளாதாரம்  மெதுவாக மீண்டு வருவதாகவும், வேலையற்றவர்களுக்கு  வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாகவும் மத்திய அரசு உறுதியளித்து  வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஐ.எல்.ஓ  அறிக்கையின்படி, ‘உலகளாவிய வேலையின்மை 57 சதவீதமாக உள்ளது. இந்தியாவில்,  வேலையின்மை விகிதம் 47 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான  பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்தில்  வேலையின்மை மிகவும் மோசமாக  உள்ளது. பாகிஸ்தானில் வேலையின்மை விகிதம் 50 சதவீதமும், இலங்கை 51  சதவீதமும், வங்கதேசத்தில் 57 சதவீதமும் உள்ளது. இன்றைய நிலையில் வேலையின்மை  என்பது உலகளாவிய  நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதால், சர்வதேச நாடுகளும்  பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் புதிய வேலை  வாய்ப்புகள் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை அதிகரித்து வருவது குறித்து, சமூக ஊடகங்கள் மூலம் பிரதமர் மோடியிடம் தங்களுக்கு வேலை வேண்டும் என்று பலர்  நேரடியாக கோரிக்கை வைக்கின்றனர். இதற்காக, ‘மோடி ரோஸ்கர் டூ’  (#modi_rojgar_do) என்ற ஹேஷ்டேக் நேற்று முன்தினம் முதல் தேசிய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த  ஹேஷ்டேக்கில் ஆறு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டுவிட் செய்து பல்வேறு கருத்துக்களை பதிவு  செய்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தபோது இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும்  என்று உறுதியளித்ததில் என்ன நடந்தது? என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

இந்த ஹேஷ்டேக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘சுனோ ஜான் கே மேன்  கி பாத்’ என்று அறிவுறுத்தினார். அதாவது மக்களின் மனதைக் கேளுங்கள் என்று ‘மோடி ரோஸ்கர் டூ’  என்ற ஹேஷ்டேக்கை டேக் செய்துள்ளார். ராகுல்காந்தியும் கருத்து தெரிவித்திருந்ததால், அவரை பின்தொடர்பவர்களும் ‘வேலை கொடுங்கள் மோடி’ என்றும், ‘வெறும் உரைகள் வேண்டாம்; வேலை கொடுங்கள்’ என்றும் பலவாறாக டுவிட்  செய்து வருகின்றனர். இது, ஆளும் பாஜகவை திணறவைத்து வருகிறது.

Related Stories: