வாட்ஸ்அப் தகவல் மூலம் சென்னையில் திருடப்பட்ட வேனை மீட்டு போலீசில் ஒப்படைத்த ஓட்டுனர்கள்

ரிஷிவந்தியம்: சென்னையில் திருடப்பட்ட வேனை வாட்ஸ் அப் தகவல் மூலம் ஓட்டுனர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். சென்னை வி.கொளத்தூர் பகுதியில் நேற்று அதிகாலையில் சுற்றுலா வேன் ஒன்று காணாமல் போனது. இதையடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் வேன் உரிமையாளர் புகார் கொடுத்தார். மேலும் காணாமல் போன சுற்றுலா வேன் குறித்து ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டு சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றுலா வேன் சுற்றித்திரிந்து டீசல் இல்லாமல் நின்றுபோனது. அங்கிருந்த ஓட்டுனர்கள் டீசல் வாங்கிக் கொடுத்து உதவி செய்தனர். இதில் ஓட்டுனர் ஒருவர் வாட்ஸ்-அப் குரூப்பில் இந்த வாகனம் காணவில்லை என பதிவிட்டு இருந்ததை பார்த்து மற்றவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள், வேன் மற்றும் அதனை திருடி வந்த நபரை பிடித்து பகண்டை கூட்டு சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து காவலர்கள் பகண்டை கூட்டு சாலைக்கு வந்து, வேன் மற்றும் வேனை திருடிய விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் சேர்ந்த ராஜேஷ் மகன் ரவி என்பவரை சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories: