வெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை!

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்

சாதித்துக் காட்டிய டாக்டர் ராதிகா வசந்தகுமார்

‘ஆயிரம் மைல் பெரும் பயணம் கூட ஒரு அடியில் இருந்துதான் துவங்குகிறது’ என்றார் புகழ்பெற்ற சீன தத்துவ ஞானி லாவோட்சு. இது எவ்வளவு  உண்மை என்பதை வாழ்க்கையிலும், தொழிலிலும் வெற்றி பெற்ற எத்தனையோ பேரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். தீர்க்கமான முதல்  அடிதான் இலக்கு என்ற எல்லையை அடைவதற்கான ஒரே வழியாகும். இதை நம் கண்முன்னே நிரூபித்திருக்கிறார் டாக்டர் ராதிகா வசந்தகுமார்.

இளம் வயதில் ஓர் இலக்கை நிர்ணயித்து கடினமாக உழைத்து வெற்றிபெற்று சாதிப்பது  என்பது வேறு, 50 வயதை கடந்த பின்பும்  தன்னம்பிக்கையுடன், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன், அதற்கு வயது ஒரு தடையில்லை என்ற  மனதிடத்துடன்  வெற்றிக்கனியை பறித்துள்ளார் டாக்டர் ராதிகா. பேரக்குழந்தைகளிடம் அன்பு என்னும் அமுதத்தை பொழிந்து, அனுபவத்தையும், அறிவையும் கொட்டி  வளர்க்கும் 50 வயதைக் கடந்த  ஒரு பாட்டி என்றும் கூறலாம். பிறரின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் அனுபவமும் அக்கறையும் நிறைந்த மருத்துவ  நிபுணர் என்றும் கூறலாம்.

வாயா லைஃப் (Vaya life) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை துவக்கிய தன் மகனுக்கு பக்கபலமாக இருந்து, நுகர்வோர்களுக்கு உகந்த,  பயனளிக்கக்கூடிய, நவீனமான, தரமான பொருட்களை உற்பத்தி செய்து, வியாபாரம் செய்யும் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபர் என்றும் கூறலாம்.  சந்தையில் பழைய விஷயங்களை அடித்து நொறுக்கி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தக்கூடிய, கிரியேட்டிவ் டிஸ்ட்ரக்‌ஷன் (Creative destruction) ரக  பொருட்களை உற்பத்தி செய்து, அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் டாக்டர் ராதிகா.

ஒருவர் வாழ்க்கையில் எந்த ஒரு கட்டத்திலும் ஒரு புதிய விஷயத்தைத் தேர்ந்தெடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட முடியும் என்பதை  அனைவருக்கும் பசுமரத்தாணிபோல பதிய வைத்திருக்கிறார் இவர். தொழில் உலகமும், பொருளாதார உலகமும் இவரை பிரமிப்புடனும்,  மரியாதையுடனும் உற்று நோக்குகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சிறந்த மகப்பேறு நிபுணராக பணியாற்றிய பின்னர், தனக்கும் தனது  தொழிலுக்கும் முற்றிலும் சம்பந்தம் இல்லாத ஒரு தொழிலை தேர்ந்தெடுப்பது என்பது இயலாத காரியம். மேலும் இந்த வயதில் ஓய்வுகாலத்தை எப்படி  செலவிடுவது, அதற்கான சேமிப்பை எப்படி உருவாக்குவது என்பதையொட்டியே ஒருவரது சிந்தனைகள் இருக்கும்.

ஆனால், அதற்கு எதிர்மறையாக சிந்தித்து, வயதெல்லாம் ஒரு தடையல்ல, மனதில் ‘தில்' இருந்தால் போதும் என்று சாதித்து காட்டியிருக்கிறார். தனது  மருத்துவ பணியை தொடர்ந்து, ஏதாவது வணிக நிர்வாகம் தொடர்பான தொழிலில் இறங்க வேண்டும் என்று தீர்க்கமான முடிவை எடுத்த டாக்டர்  ராதிகா, 50-வது வயதில் ஐதராபாத்தில் உள்ள இந்திய வணிக பள்ளி யில் (Indian School of Business) அடி எடுத்து வைக்கிறார். அங்கு அவர்  மற்ற மாணவர்களைபோல விழுந்து விழுந்து படிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனென்றால், அவருக்கு கற்பது என்றால் கற்கண்டை  சாப்பிடுவது போல இனிப்பானது.

அவர் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதும் சரி, எம்.டி. படிக்கும் போதும் சரி, அவர் ஒரு சராசரி மாணவியாக இருந்ததில்லை, இரண்டிலுமே தங்கப் பதக்கம்  பெற்று முதலிடத்தில் தேறியவர். இதனைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பிறகு 2009 ஆம் ஆண்டு எதிர்காலத்தில் வெற்றிக்கொடியை நாட்டப்போகும்  ஒரு பிரகாசமிக்க மாணவியாக வெற்றியுடன் இந்திய வணிகப் பள்ளியில் இருந்து வெளியே வந்தார். இந்திய வணிகப் பள்ளியில், வணிகம் சார்ந்து  படித்துக் கொண்டிருக்கும்போதே, அமெரிக்காவின் பெர்க்கலேயில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய சர்வதேச போட்டியிலும் பங்கேற்று  சாதனை படைத்துக் காட்டினார்.

அதேபோல் சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகம் நடத்திய சர்வதேச தொழில் முனைவோருக்கான போட்டியிலும் பங்கேற்று  இறுதிப்பட்டியலில் இடம் பிடித்தார். இந்திய வணிகப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்னர், சவீதா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில்  தலைமை செயல்பாட்டு அதிகாரி என்ற அந்தஸ்தில் நிர்வாக பங்களிப்பை வழங்கினார். 2016-ஆம் ஆண்டு, டாக்டர் ராதிகாவின் மகன் வஷிஸ்ட்  வசந்தகுமார், ‘வாயா லைஃப்’ என்ற நிறுவனத்தைத் துவக்கினார். அதைத் தொடர்ந்து டாக்டர் ராதிகா, அந்த நிறுவனத்தின் பின்னணியில்  மிகப்பெரிய  உந்து சக்தியாக உருவெடுத்து, வெற்றியின் எல்லையை நோக்கி கொண்டு சென்றார்.

‘வாயா லைஃப்' ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட டாக்டர் ராதிகா, தன்னுடன் பணியாற்றும் இளம் வயது சக ஊழியர்களைவிட  எப்போதும் இரண்டு அடி முன்னிலையிலேயே இருப்பார். அனைவரும் நிகழ்காலத்தை பற்றி நினைத்து, அதற்கு ஏற்ற வகையில் திட்டங்களை  வகுத்தார்கள் என்றால், இவரோ அதற்கு அடுத்த கட்டங்களை பற்றியும், அப்போது நிலவக்கூடிய  சூழல்களை பற்றியும், அதற்கு ஏற்ற திட்டங்களை  வகுப்பது பற்றியும் சிந்திப்பார். இவரின் சிந்தனைதான், ‘வாயா லைஃப்' தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் அதிநவீனமாகவும், புதுமையான  எஞ்சினியரிங் தொழில்நுட்பத்துடனும், சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

15-க்கும் மேற்பட்ட நாடுகளில் சந்தைப் படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா, சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற  நாடுகளில் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை சேமித்து வைக்கும் வேர் ஹவுஸ் குடோன்களை அமைத்து, வணிக செயல்பாட்டை விரிவுபடுத்தும்  நடவடிக்கைகளை டாக்டர் ராதிகா தனிப்பட்ட முறையில் கவனித்துக் கொள் கிறார். அடுத்தகட்ட நகர்வுகளுக்கு அடி யெடுத்து வைக்கும் ‘வாயா  லைஃப்' நிறுவனத்தின் இளமையான, புத்துணர்வு மிக்க குழுவினருக்கு டாக்டர் ராதிகா ஒரு ரோல் மாடலாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார்.

பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களை புதுமையான வடிவமைப்புடன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு டாக்டர் ராதிகாவின்  ஆலோசனை மற்றும் வழி காட்டுதலுடன் அவரது மகன் வஷிஸ்ட் வசந்தகுமாரால் துவங்கப்பட்ட நிறுவனம்தான் வாயா லைஃப். ஒவ்வொருவரும்  அன்றாடம் பயன்படுத்தும் லஞ்ச்பாக்ஸ்-ஐ (lunch box) வாக்யுதெர்ம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையான முறையில், எடுப்பான  தோற்றத்துடன்,  நீடித்து உழைக்கும் வகையிலும் வாயா டிபன் (Vaya tyffyn) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் வாயா டிரிங் (Vaya Drynk) என்ற பெயரில் காற்றுப்புகாத வெற்றிடத்தை உருவாக்கும் டம்ளர், வாயா பிரசர்வ் (Vaya Preserve) என்ற  பெயரில் அதிக அளவில் உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் வீட்டு உபயோக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்கள். இந்த  பொருட்கள் உங்களது சமையல் அறை, டைனிங் டேபிள் ஆகியவற்றை அழகுபடுத்துவதோடு, உணவு பொருட்கள் நீண்ட நேரம் கெடாமல் பாதுகாக்கும்  என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வாயா லைப் நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்களை வாயா டாட் இன் (Vaya.in) என்ற இணைய தளத்தின்  வழியாகவும் வாங்க முடியும்.

வாயா லைஃப் நிறுவனம் பற்றி டாக்டர் ராதிகா கூறும் போது, ‘‘மருத்துவ தொழிலுக்கும், வணிக நிர்வாகத்துக்கும் உள்ள வேறுபாடு பற்றி  அனைவருக்கும் தெரியும். என்னை பொறுத்தவரை, மற்றவர்களுக்கு சேவை செய்வதே உச்சபட்ச இலக்கு என கருதுகிறேன். மருத்துவமனையில்  ஒருவருக்கு புதிய வாழ்வை அளிப்பதும், வணிகத்தில், வாயா லைஃப் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் வெளிப் படுத்தும் மகிழ்ச்சியுமே  எனது நோக்கம்’’ என்கிறார்.

வாழ்க்கையிலும் வணிகத்திலும் வெற்றிபெற வயது ஒரு தடை இல்லை என்று தனது செயல்பாட்டாலும், வெற்றி யாலும் நிரூபித்து காட்டியிருக்கும்  டாக்டர் ராதிகா வசந்தகுமார், வாயா லைஃப் ஊழியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஊக்கம், உத்வேகம், தன்னம் பிக்கை அளிக்கும் உந்து சக்தி. ‘நீ  விரும்புகிற உலகத்தைப் பார்க்க வேண்டுமென்றால், முதலில் உனக்குள் மாற்றத்தை ஏற்படுத்து' என்ற காந்தியின் பொன்மொழி டாக்டர் ராதிகா வசந்த  குமார் வழியாக நினைவில் வந்து செல்கிறது.

தோ.திருத்துவராஜ்

Related Stories: