வாணியம்பாடி அருகே மணல் கொள்ளையால் பாழான பாலாற்றில் தோல் கழிவு கொட்டுவதால் சுகாதார சீர்கேடு-அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

வாணியம்பாடி :  வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பாலாற்றின் கரை பகுதிகளில் குப்பை, தோல் கழிவுகளை மர்ம நபர்கள் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு பாலாறு மாசடைந்துள்ளது.

மேலும், நிலத்தடி நீரும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் அருகாமையில் நடந்து வருகிறது.ஆனால், இதை அரசு அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே மணல் கொள்ளையர்களால் பாலாறு பெரிய, பெரிய பள்ளங்களாக காட்சியளித்து வருகிறது.

மேலும், மணல்கொள்ளையால் நீர்மட்டமும் அதளபாதளத்திற்கு சென்றுள்ளது. இந்தநிலையில் நிலத்தடியில் உள்ள சிறிதளவு நீரும் மாசடையும் வகையில் தோல், குப்பை கழிவுகளை சமூக விரோதிகள் கொட்டி வருகின்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலாறு கரை பகுதிகளில் குப்பை, தோல் கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். குப்பை, தோல் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: