புனரமைத்தும் பயனில்லை புதர்மண்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகம்

வேப்பூர்: மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காஞ்சிராங்குளம் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ஏழு லட்சம் ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு அதன் பின் புனரமைக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போதிய பராமரிப்பின்றி இந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பொது சுகாதார வாளாகத்தை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  நீண்ட நாட்களாகவே இந்த சுகாதார வளாகம் முழுவதும் பராமரிப்பு இன்றி கிடப்பதால் இதனுள் இருந்த தண்ணீர் தொட்டி, குழாய்கள் சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர். பயன்பாடு இல்லாமல் சில ஆண்டுகளாகவே பூட்டி கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை திறந்து சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூய்மை இந்தியா திட்டம் மூலம் கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்தி வரும் அரசு இதுபோன்று மூடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Related Stories: