×

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து மாநகராட்சிகளிலும் பாஜக முன்னிலை.. தொண்டர்கள் கொண்டாட்டம்!!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை வகித்து வருகிறது.குஜராத் மாநிலத்தில், அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ் நகர் மாநகராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளாக இந்த மாநகராட்சிகள் பாஜவிடம் இருந்து வருகிறது. 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இது தவிர ஜூனாகத் மாநகராட்சியில் நடக்கும் 2 இடங்களுக்காக நடக்கும் இடைத்தேர்தலில் 9 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக பல வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 263 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 56 வார்டுகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதர கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. அம்மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான அகமதாபாத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 192 இடங்களில் 82 வார்டுகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

அதே போல ராஜ்கோட் மாநகராட்சியில் மொத்தமுள்ள 72 இடங்களில் 56 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மேலும் 12 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. சூரத் மாநகராட்சியில் மொத்தமுள்ள 120 இடங்களில் 51 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. வதோதரா மாநகராட்சியில் மொத்தமுள்ள 76 இடங்களில் 33 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஜாம்நகரில் 40 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாவ் நகர் மாநகராட்சியிலும் பாஜகவே முன்னிலை பெற்றுள்ளது.


Tags : Gujarat ,BJP , குஜராத்
× RELATED குஜராத் அறுவை சிகிச்சை டாக்டரின்...