மாஃபியா அரசியலை செய்யும் பாஜக!: புதுச்சேரி காங்., எம்.எல்.ஏக்களுக்கு அமித்ஷா நேரடியாக மிரட்டல்..தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு..!!

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக பேசி மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து நாராயணசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக துணை நிலை ஆளுநர் மூலம் நாராயணசாமி  அரசுக்கு மத்திய அரசு தொல்லை கொடுத்ததாக கூறினார். ஆட்சி கவிழ்ப்பு விவகாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் நேரடியாக பேசி மிரட்டியதாகவும், தினேஷ் குண்டுராவ் கூறினார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு மத்தியில் பேசிய அவர், மத்திய பாஜக அரசு தான் இந்த சதி திட்டத்தை நிறைவேற்றியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உடன் நேரடியாக பேசுகிறார். அவர்களை சந்தித்துள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை மூலம் மிரட்டுகின்றனர். பணத்தால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் எந்த மாநிலத்திலும் ஆட்சி செய்யக்கூடாது என்பதே பாஜகவின் திட்டம். காங்கிரஸ், பிராந்திய கட்சிகளை ஒழித்துக்கட்ட அவர்கள் முடிவு செய்துள்ளனர் என தெரிவித்தார். புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு கிடையாது. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் புதிய வேட்பாளர்களை களமிறக்கி வெற்றி பெறுவோம் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார். காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளை பாஜக ஒழிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அவர்,  எதிர்வரும் தேர்தலில் பாசிச ஆட்சியாளர்களை தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

Related Stories: