தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்: தேர்தலை முன்னிட்டு கவர்ச்சிகர அறிவிப்புக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று காலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, 3 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை திமுக - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது. இந்தநிலையில், 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடுகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கடந்த இரண்டு முறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இன்று முதல் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டமும் கலைவாணர் அரங்கத்திலேயே நடைபெற இருக்கிறது.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10வது முறையாகும். பட்ஜெட் படித்து முடிந்ததும், இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் இதுவாகும்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான பல அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடிக்கான தொகை, தேர்தல் நடத்துவதற்கான செலவு, நிவர் மற்றும் புரெவி புயலுக்கான நிவாரண தொகை ஆகியவற்றுக்கு தேவையான நிதி இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். சில சட்டதிருத்த மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது. கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது.

பட்ஜெட் மீதான விவாதம் முடிந்ததும் சட்டமன்ற கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 11 மணிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். ஏற்கனவே சட்டசபை மண்டபத்தில் 12 தலைவர்களின் படங்கள் இருக்கின்றன. தற்போது மேலும் 3 படங்கள் திறக்கப்படுவதன் மூலம், தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்கிறது. இந்த படத் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி தலைவ்ரகள் பங்கேற்கின்றனர். சட்டப்பேரவை மண்டபத்தில் வ.உ.சிதம்பரனார், டாக்டர் சுப்பராயன் மற்றும் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் உருவப்படங்கள் திறக்கப்படுகிறது.

Related Stories: