பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆட்டோக்களில் கட்டணம் உயர்வு: மக்கள் கடும் அதிருப்தி

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வையடுத்து ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தினம் அதிகரித்துக் கொண்டேவருகிறது. பெட்ரோல் லிட்டர் ரூ.92.59 டீசல் விலை ரூ.85.98க்கும் நேற்று விற்கப்பட்டது. சென்னையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வையடுத்து ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஆட்டோ கட்டணம் ரூ.60 முதல் ரூ.75 வரையும், ஷேர் ஆட்டோக்களில் குறைந்தபட்சம் முன்பு ரூ.10 வசூலிக்கப் பட்ட நிலையில் இப்போது குறைந்தபட்ச கட்டணம் ஒருவருக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது. தற்போது ஷேர் ஆட்டோவில் ஏறி அடுத்த நிறுத்தத்தில் இறங்கினாலே ரூ.20 கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கிண்டி, போரூர், அடையாறு, தி.நகர், மூலக்கடை, பெரம்பூர், மாதவரம் புரசைவாக்கம், அண்ணா நகர், மதுரவாயல், பூந்தமல்லி, அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் அதிகம் இயக்கப்படுகிறது. அதைப்போன்று சென்னையின் புறநகர் பகுதிகளில் மாநகர பேருந்துகள் இல்லாத பகுதிகளில் அதிக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. அப்பகுதியில் திடீரென கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோக்களில் செல்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் மக்கள் முன்பு போல் மாநகர பேருந்துக்காக காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய சம்பளத்தில் பாதி பணத்தை போக்குவரத்துக்கே செலவிடும் செலவிட வேண்டியுள்ளது என புலம்புகின்றனர். எனவே காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: