முகாமில் யானையை தாக்கிய விவகாரம் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றின் கரையில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் 26 யானைகள் பங்கேற்றுள்ளன. முகாமில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமல்யதாவை பாகன் தாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாகன் வினில்குமார்  என்ற ராஜன் (46) மற்றும் சிவபிரசாத் (32) ஆகியோரை மேட்டுப்பாளையம் வனத்துறையினர் விசாரணைக்காக வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணைக்கு பின், யானையை அடித்து துன்புறுத்தியது தொடர்பாக வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், கோவை ஜே.எம். 8 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், யானைகள் புத்துணர்வு முகாமில் பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், கால்நடை மருத்துவர்கள் 5 பேர் முகாமுக்கு வந்தனர். மருத்துவ குழுவினர் சேகரிக்கும் தகவல்களை கொண்டு யானைக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்க உள்ளனர்.

Related Stories: