மாநில தேர்தல் அலுவலகம் முன் மின் ஊழியர்கள் போராட்டம்

அண்ணாநகர்: தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தின் முன்  நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மண்டல செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். இங்கு போராட்டம் செய்யக்கூடாது, என தெரிவித்தனர்.

ஆனால், அதை ஏற்காமல் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவர்கள், இதே நிலை  நீடித்தால், எங்களுடைய வாக்காளர் மற்றும் ஆதார் அடையாள அட்டையை ஒப்படைத்துவிட்டு,  தமிழகத்தை விட்டு அகதிகளாக வெளியேறும் போராட்டத்தை நடத்துவோம் என்றனர். போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: