விஜய் ஹசாரே டிராபி தமிழகத்துக்கு முதல் தோல்வி: ஹெப்பர் சதத்தில் ஆந்திரா அசத்தல்

இந்தூர்: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் எலைட் பி பிரிவில், தமிழகம் தனது 2வது லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  ஆந்திராவிடம் தோல்வியைத் தழுவியது. ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆந்திரா முதலில் பந்துவீசியது. முதல் லீக் போட்டியில் பஞ்சாப் அணியை பந்தாடிய தமிழ்நாடு அணியில் அருண் கார்த்திக், மணிமாறன் சித்தார்த் ஆகியோருக்கு பதிலாக செழியன் ஹரிநிஷாந்த், ஆர்.சிலம்பரசன்  ஆகியோர் சேர்க்கப்பட்டனர். தொடக்க வீரர்கள் ஹரிநிஷாந்த், ஜெகதீசன் இருவரையும் முறையே 4, 11 ரன்களில் கிரிநாதன் ரெட்டி வெளியேற்ற, தமிழகம் 23 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கம் கணடது. அதன்பிறகு வந்த சாய்  கிஷோர் 29 ரன், பாபா அபராஜித் 40 ரன் (62 பந்து, 1 பவுண்டரி), சோனு யாதவ் 37 ரன்   எடுக்க, இந்திரஜித் 3, கேப்டன் தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் வெளியேறினர்.

ஷாருக்கான் 19, எம்.முகமது  2, முருகன் அஷ்வின்  14 ரன்னில் அணிவகுக்க, தமிழகம் 41.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 176 ரன் எடுத்தது. ஆந்திர பந்துவீச்சில் சீப்புரபள்ளி ஸ்டீபன், சோயிப் முகமதுகான் தலா 3, கிரிநாத் ரெட்டி  2, நிதிஷ்குமார் ரெட்டி ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆந்திரா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிரந்தி குமார் 14 ரன் , கிரண் ஷிண்டே 0, கேப்டன் ஹனுமா  விகாரி 2 ரன்னில் வெளியேற தமிழ்நாடு உற்சாகமானது. ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அஷ்வின் ஹெப்பர், ரிக்கி புயி ஆகியோர் பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆந்திரா  29.1  ஓவரிலேயே 3விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய அஷ்வின் ஹெப்பர் 101 ரன் (84 பந்து, 11 பவுண்டரி 5 சிக்சர்), ரிக்கி புயி 52 ரன்னுடன் (41 பந்து, 6 பவுண்டரி, 2  சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழ்நாடு தரப்பில் சிலம்பரசன் 2, சாய் கிஷோர் ஒரு விக்கெட் எடுத்தனர்.

முதல் போட்டியில் விதார்பாவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற ஆந்திரா நேற்று முதல் வெற்றியை பதிவு செய்து 4 புள்ளிகளை தட்டிச் சென்றது. அதே சமயம் தமிழக அணி தனது முதல் தோல்வியைத் தழுவி ஏமாற்றமளித்தது.  அடுத்து 3வது லீக் ஆட்டத்தில் நாளை மத்தியப்பிரதேச அணியை சந்திக்கிறது. நேற்று நடந்த மற்ற லீக் ஆட்டங்களில் ஐதராபாத், குஜராத், பரோடா, ஜார்க்கண்ட், விதர்பா, கேரளா, கர்நாடகா, ரயில்வேஸ் அணிகள் வெற்றி பெற்றன.

கலக்கினார் ஸ்ரீசாந்த்

உத்தரப்பிரதேச அணியுடன் நேற்று மோதிய கேரள அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. டாஸ் வென்ற கேரளா முதலில் பந்துவீச, உ.பி அணி 49.4 ஓவரில் 283 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபிஷேக் 54, கரண் ஷர்மா  34, பிரியம் கார்க் 57, ரிங்கு சிங் 26, அக்‌ஷ்தீப் நாத் 68 ரன் விளாசினர். கேரள பந்துவீச்சில் சாந்தகுமாரன் சாந்த் 9.4 ஓவரில் 65 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய கேரளம் 48.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. உத்தப்பா 81 ரன் (55 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), சஞ்சு சாம்சன் 29, கேப்டன் சச்சின் பேபி 76 ரன் (83 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்),  வத்சல் கோவிந்த் 30, ஜலஜ் சக்சேனா 31 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். ரோஜித் 6, நிதீஷ் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேரள அணி 4 புள்ளிகள் பெற்றது.

Related Stories:

>