ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை 40,000 கோடி வரை குறையும்: அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூலில் ஏற்படும் பற்றாக்குறை 40,000 கோடி வரை குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய, மாநில அரசுகளுக்கு வரி வருவாய்தான் பிரதானமாக உள்ளது. இதனால்தான், பிற வகையில் வரி  வசூல் குறைந்தாலும் பெட்ரோலிய பொருட்கள் மீது வரிகளை உயர்த்தி மத்திய மாநில அரசுகள் ஈடுகட்டுகின்றன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மாநிலங்களின் வரி வசூல் வெகுவாக  சரிந்தது. இதன் காரணமாக, மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் நடப்பு ஆண்டில் 1.80 லட்சம் கோடி சரியும் என கணிக்கப்பட்டது. இதில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பு 1.10 லட்சம் கோடி எனவும், கொரோனா  தொற்று பரவல் காரணமாக ஏற்படும் இழப்பு 70,000 கோடி எனவும் மதிப்பீடு செய்யப்பட்டது.

இதில், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், 1.10 லட்சம் கோடியை மாநிலங்கள் கடனாக பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. இதற்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை தொடர்ந்து இந்த இழப்பீட்டை  மத்திய அரசு மூலம் கடன் பெற்று வழங்கி வருகிறது.  இந்நிலையில், கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதை அடுத்து, வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, பற்றாக்குறை ஏற்படும் என கருதப்பட்ட 1.80  லட்சம் கோடியில், 40,000 கோடி குறையும் எனவும், பற்றாக்குறை 1.40 லட்சம் கோடியாக இருக்கும் எனவும் மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை வந்த ஜிஎஸ்டி வசூலை அடிப்படையாக  வைத்து கணக்கீடு செய்ததில், நடப்பு நிதியாண்டில் இழப்பீடு 30,000 கோடி முதல் 40,000 கோடி வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சிறப்பு கடன் திட்டம் மூலம் மத்திய அரசு மாநிலங்களுக்கு சுமார் 1 லட்சம் கோடியை  வழங்கியுள்ளது.

 வரும் நிதியாண்டில் இழப்பீட்டை மாநிலங்களுக்கு எந்த வகையில் வழங்குவது என்பது குறித்து, மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.  வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் இழப்பு நடப்பு  நிதியாண்டை விட குறைவாகவே இருக்கும். இருப்பினும் வருவாய் வளர்ச்சி 14 சதவீதம் எட்டுவது சிரமம்தான் என்றார்.  கொரோனா ஊரடங்கு அமலுக்கு பிறகு, ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டு ஏப்ரலலில் 32,172 கோடியாக சரிந்தது.   இதன்பிறகு, கடந்த 4 மாதங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை ஜிஸ்டி வசூல் ₹1 லட்சம் கோடியை தாண்டி விட்டது. கடந்த ஜனவரியில் மட்டும் உச்சபட்ட அளவாக 1.2 லட்சம் கோடி ஜிஎஸ்டி  வசூலானது.

Related Stories: