கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு வந்த பெண், திடீரென தீக்குளிக்க முயன்றார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த  ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி (42). கிரைண்டர் பழுது பார்க்கும் தொழில் செய்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி, அதே பகுதியில் புறம்போக்கு நிலம் ஒன்றை மடக்கி தனதாக்கி உள்ளார்.கடந்த 3 நாட்களுக்கு முன், தனது  நிலத்தை பார்க்க சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவர், லட்சுமியின் நிலம் தன்னுடையது எனக் கூறி தகராறு செய்தார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த  பச்சையப்பன், லட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த லட்சுமி, மேல்மருவத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், மருத்துவமனையில், காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ  சான்றிதழை பெற்று வரும்படி போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து அவர், மதுராந்தகம் அரசு  மருத்துவமனைக்கு சென்று சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர், அந்த சான்றிதழ் பெறுவதற்கு, லட்சுமியிடம்,  ₹300 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் லட்சுமி கலந்து கொண்டார். அப்போது, அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை, திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள், அவர் மீது, தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீசார், லட்சுமியை மீட்டு அங்கிருந்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். அப்போது லட்சுமி, செய்தியாளர்களிடம்  கூறுகையில், போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள். எனது நிலத்தை உரிமை கொண்டாடுபவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை அலைக்கழிக்கின்றனர். என்னிடமே லஞ்சம் கேட்கின்றனர் என கூறினார். அவரிடம்  தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: